விக்கிரவாண்டி அருகே, ரெயில்வே சுரங்கப்பாதைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் + "||" + Near Vikravandi, Protesting against the railway tunnel The struggle of the villagers
விக்கிரவாண்டி அருகே, ரெயில்வே சுரங்கப்பாதைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
விக்கிரவாண்டி அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அருகே நெடிமோழியனூர் ரெயில்வே பாதையில் ரெயில்வே துறை சார்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு சுரங்கப்பாதை அமைத்தால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பொது போக்குவரத்து தடைபடும் எனவும், அதே நேரத்தில் விவசாய பகுதியான இக்கிராமத்தில் விளையும் கரும்பு, சவுக்கை உள்ளிட்ட விளைபொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும், எனவே சுரங்கப்பாதை அமைப்பதை கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் ரெயில்வே துறையினர், சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை நெடிமோழியனூர் கிராம மக்கள், பணி நடைபெறும் இடத்திற்கு திரண்டு சென்று அங்கு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது சுரங்கப்பாதை அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் திண்டிவனம் தாசில்தார் ராஜசேகர், விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள் கூறுகையில், ரெயில்வே துறையில் ஏற்கனவே மத்திய அரசு மூலம் நிதி ஒதுக்கீடு செய்யும் பணியை தடை செய்ய முடியாது எனவும் உங்களின் கோரிக்கையை ரெயில்வே அதிகாரிகளுடன் கலந்து பேச வேறு ஒரு தேதியில் திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வதாகவும் கூறியதன்பேரில் கிராம மக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த திடீர் போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.