ராமேசுவரத்தில் 2200 பேர் தரிசனம்: மீனாட்சி அம்மனை காண அதிகாலையிலேயே திரண்ட பக்தர்கள் - மீண்டும் இலவச லட்டு பிரசாதம் எப்போது? அதிகாரி விளக்கம்
5 மாதங்களுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டதால் மீனாட்சி அம்மனை காண அதிகாலையிலேயே பக்தர்கள் திரண்டனர். மீண்டும் இலவச லட்டு பிரசாதம் எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பாக அதிகாரி விளக்கம் அளித்தார். இதே போல் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று 2200 பேர் தரிசனம் செய்தனர்.
மதுரை,
கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இறுதியில் கோவில்கள், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. ஊரடங்கில் தளர்வை தொடர்ந்து சிறிய கோவில்கள் கடந்த மாதம் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு அடுத்தக்கட்ட தளர்வாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும் நேற்று முதல் தரிசனம் நடைபெறும் என்று அறிவித்தது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பெரிய கோவில்களில் தரிசனத்துக்கான ஏற்பாட்டு பணிகள் நேற்று முன்தினம் மும்முரமாக நடந்தன.
மதுரை மீனாட்சி அம்மனை காண அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கோவில் அருகே திரண்டு காத்திருந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசாரும், கோவில் நிர்வாகமும் வரிசையாக நிறுத்தி வைத்து காலை 6 மணிக்குத்தான் உள்ளே அனுமதித்தார்கள்.
பக்தர்களின் உடல்நிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்தும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஒவ்வொருவராக இடைவெளி விட்டு நின்று கோவிலுக்குள் சென்று மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரரை தரிசனம் செய்தனர். அங்கு பக்தர்கள் தீபாராதனை தட்டினை வணங்கி அதில் வைத்திருந்த குங்குமம், விபூதி பிரசாத பாக்கெட்டுகளை எடுத்து கொண்டனர். யாருக்கும் கையில் விபூதி, குங்குமம் வழங்கப்படவில்லை.
அர்ச்சனைக்கு பூ, தேங்காய் பழம் போன்றவை உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் எந்த இடத்திலும் பக்தர்கள் உட்காரவும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் கோவிலுக்குள் வரும் அனைவரையும் கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
வயதானவர்களை போலீசார் வரிசையில் நிற்க விடவில்லை. இதனால் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை என்பதால் அந்த குழந்தைகளை பெற்றோர் கிழக்கு சித்திரை வீதியில் தனியாக விட்டுச்செல்லும் நிலையும் ஏற்பட்டது.
பக்தர்கள் அனைவரும் அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் வரிசையில் நின்ற பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்களை போலீசார் பாதுகாப்பு கருதி மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர்.
இதனால் அந்த இடத்தில் சிறிது தாமதம் ஏற்பட்டது. பக்தர்கள் வெகுநேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலையும் ஏற்பட்டது. எனவே அந்த பகுதியில் கூடுதல் போலீசாரை நியமித்து பக்தர்களை விரைந்து கோவிலுக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. ஒரே வாசல் வழியாக மட்டுமே தரிசனத்திற்கு அனுமதித்ததால் குறைவான பக்தர்களே உள்ளே செல்ல முடிந்தது எனவும், எனவே தெற்கு கோபுர வாசல் வழியாகவும் பக்தர்களை உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தரிசன ஏற்பாடுகள் குறித்து கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை கூறும் போது, “அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் சுவாமி-அம்மனை தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று பக்தர்கள் உள்ளே செல்கிறார்கள். தற்போது ஒரு மணி நேரத்தில் எவ்வளவு பக்தர்கள் சென்றார்கள் என்பதை கணக்கெடுத்து வருகிறோம். இதன் மூலம் இவ்வளவு பக்தர்களைத்தான் அனுமதிக்க முடியும் என்று முடிவு செய்யப்படும். அரசின் மறுஉத்தரவு வரும் வரை கோவிலில் இலவச லட்டு பிரசாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதே போல் ராமேசுவரம் கோவிலில் நேற்று காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்குள் வந்த பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிந்த படியும், சமூக இடைவெளி விட்டும் சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்து சென்றனர். உள்ளூரை சேர்ந்த பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது.
நேற்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடைய குடும்பத்தினர் உள்பட 2,200 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதுபோல் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு குருக்களின் கைகளால் விபூதி,குங்குமம் உள்ளிட்ட எந்த பிரசாதமும் வழங்கப்படவில்லை. 22 தீர்த்த கிணறுகளில் நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் நேற்று கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
வெளியூர் பக்தர்கள் கூறுகையில், “22 தீர்த்தங்களில் புனித நீராடி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக இங்கு வந்தோம். ஆனால் அதற்கு அனுமதி இல்லை என தெரிவித்து விட்டனர். இதனால் மிகுந்த ஏமாற்றம் தான் ஏற்பட்டுள்ளது” என்றனர். அதே நேரத்தில் அக்னி தீர்த்த கடல் பகுதியில் குறைவான பக்தர்கள் நீராடினர்.
Related Tags :
Next Story