ராமநாதபுரத்தில் 160 அரசு பஸ்கள் இயங்கின


ராமநாதபுரத்தில் 160 அரசு பஸ்கள் இயங்கின
x
தினத்தந்தி 2 Sept 2020 3:45 AM IST (Updated: 2 Sept 2020 7:51 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் 160 அரசு பஸ்கள் இயங்கின.

ராமநாதபுரம்,

ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவித்து மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கும் என்று அரசு அறிவித்தது. இதன்படி நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் பஸ் போக்குவரத்து தொடங்கியது. முன்னதாக பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் முககவசம் மற்றும் கையுறை அணிந்து பாதுகாப்பு அம்சத்துடன் வந்தனர். பஸ்சில் பயணிகள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு கைகழுவி முககவசம் அணிந்த பின்னரே ஏற அனுமதிக்கப்பட்டனர்.

சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் தமிழ்மாறனிடம் கேட்டபோது, அரசின் உத்தரவின்படி ராமநாதபுரத்தில் பஸ்கள் முழு பாதுகாப்புடன் இயக்கப்பட்டுஉள்ளது. மொத்தம் உள்ள 320 பஸ்களில் தற்போது 160 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்படும். பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் ஆகியோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே பஸ் இயக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

ராமநாதபுரத்தில் இருந்து எஸ்.பி.பட்டிணம், சாயல்குடி, பார்த்திபனூர், ராமேசுவரம் என மாவட்ட எல்லை வரையில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். பொது போக்குவரத்து தொடங்கினாலும் மக்கள் கொரோனா அச்சம் காரணமாக பஸ்களில் ஏறி பயணம் செய்ய தயங்கி வருகின்றனர். இதன்காரணமாக வழக்கமாக அதிக கூட்டத்துடன் செல்லும் பஸ்களில்கூட ஒரு சில பயணிகள் மட்டுமே ஏறிச்செல்வதை காணமுடிந்தது.

Next Story