ஈரோடு மாவட்டத்துக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கியது பயணிகள் வருகை குறைவு- தனியார் பஸ்கள் ஓடவில்லை


ஈரோடு மாவட்டத்துக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கியது பயணிகள் வருகை குறைவு- தனியார் பஸ்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 2 Sept 2020 10:06 PM IST (Updated: 2 Sept 2020 10:06 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்துக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கியதையொட்டி குறைவான பயணிகளே பயணம் செய்தனர். தனியார் பஸ்கள் ஓடவில்லை.

ஈரோடு,

கொரோனா வைரஸ் பரவல் காணரமாக தமிழகத்தில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று முதல் மாவட்டத்திற்குள் மட்டும் பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று அரசு பஸ்கள் ஓடத்தொடங்கின. அரசு போக்குவரத்து கழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி, அந்தியூர், ஈரோடு, கொடுமுடி, பவானி உள்பட 10-க்கும் மேற்பட்ட பணிமனைகளில் சுமார் 800 பஸ்கள் உள்ளன. நேற்று காலை முதல் 154 பஸ்கள் ஓடத்தொடங்கின. இதில் 105 நகர பஸ்கள், 49 புறநகர் பஸ்கள் ஆகும். 154 பஸ்களில் சுமார் 100 பஸ்கள் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. அப்போது பயணிகளின் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்றவை பதிவு செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஈரோடு பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது அவர், பஸ்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு உள்ளதா? என்றும், பயணிகள் முக கவசம் அணிந்திருக்கிறார்களா? என்றும், இடைவெளி விட்டு பயணிகள் பயணம் செய்கிறார்களா? என்றும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

முக கவசம்

தனியார் பஸ்கள் ஓடவில்லை

நேற்று தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதுகுறித்து ஈரோடு மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பழனிசாமி கூறும்போது, ‘பொது போக்குவரத்து தொடங்கலாம் என்றும், 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதனால் எங்களுக்கு கட்டுப்படியாகாது. மேலும், மாவட்டத்துக்குள் மட்டும்தான் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் குறைந்த அளவிலேயே தனியார் பஸ்கள் மாவட்டத்திற்குள் இயங்கி வருகிறது. ஆனால் மாவட்டம் விட்டு மாவட்டம் அதிகளவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே மாவட்டம் விட்டு மாவட்டம் பஸ் போக்குவரத்து தொடங்கினால் மட்டுமே எங்களுக்கு ஓரளவு கட்டுப்படியாகும். அதுவரைக்கும் தனியார் பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம்’ என்றார்.

Next Story