மழையால் சேறும், சகதியுமாக மாறிய வ.உ.சி. பூங்கா தற்காலிக மார்க்கெட் காய்கறிகள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி


மழையால் சேறும், சகதியுமாக மாறிய வ.உ.சி. பூங்கா தற்காலிக மார்க்கெட் காய்கறிகள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 2 Sep 2020 10:26 PM GMT (Updated: 2 Sep 2020 10:26 PM GMT)

மழை பெய்ததால் ஈரோடு வ.உ.சி. பூங்கா தற்காலிக மார்க்கெட் நேற்று சேறும், சகதியுமாக இருந்ததால் காய்கறிகள் வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

ஈரோடு,

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் ஈரோடு பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து பஸ் போக்குவரத்து தொடங்கியதன் காரணமாக நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் ஈரோடு வ.உ.சி. பூங்காவிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளும், 100-க்கும் மேற்பட்ட பழக்கடைகளும் உள்ளன. தாளவாடி, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி, பவானிசாகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த மொத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச்செல்கிறார்கள்.

சேறும், சகதியுமாக...

இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி இரவு ஈரோடு மாநகர் பகுதியில் 30 மில்லி மீட்டர் மழையும், நேற்று முன்தினம் 11 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. இதன் காரணமாக வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் மழைநீர் குட்டைபோல் தேங்கி சேறும், சகதியுமாக மாறியது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் ஏற்றிவந்த வாகனங்கள் சேற்றில் சிக்கின.

மேலும் காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் சேற்றில் நடந்து சென்று காய்கறிகள் வாங்க முடியாமல் அவதி அடைந்தனர். இதுகுறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூறும்போது, ‘மழை பெய்தாலே வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் காய்கறிகள் கொண்டு வருவதிலும், பொதுமக்கள் வாங்கிச்செல்வதிலும் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே தாழ்வான பகுதிகளில் மண் போட்டு நிரப்ப மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்கள்.

Next Story