பஸ் போக்குவரத்து தொடங்கினாலும் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் ஈரோடு பஸ் நிலையம்


பஸ் போக்குவரத்து தொடங்கினாலும் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் ஈரோடு பஸ் நிலையம்
x
தினத்தந்தி 2 Sep 2020 10:51 PM GMT (Updated: 2 Sep 2020 10:51 PM GMT)

பஸ் போக்குவரத்து தொடங்கினாலும் பயணிகள் கூட்டமின்றி ஈரோடு பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

ஈரோடு,

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கும் பஸ்கள் சென்று வந்தன. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 5 மாதங்களாக பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு கோட்டத்தில் 11 பணிமனைகளில் உள்ள 800-க்கும் மேற்பட்ட பஸ்கள் ஓடவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மாவட்டத்துக்குள் பஸ் போக்குவரத்தை தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக 154 பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் கிருமி நாசினி கொண்டு பஸ்கள் சுத்தம் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் முதல் ஓடத்தொடங்கின.

வெறிச்சோடியது

இதில் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. கொரோனா அச்சம் காணரமாக நேற்று முன்தினம் போல் நேற்றும் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. பஸ்சில் 50 சதவீத பயணிகள் ஏறிய பின்னரே பஸ்கள் புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் வெகு நேரமாக பஸ்சில் அமர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது.

நிமிடத்துக்கு 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் வெளியேறுவதும், உள்ளே வருவதுமாக இருந்த ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று 10 நிமிடங்களுக்கு ஒரு பஸ் மட்டுமே வெளியேறுவதும், உள்ளே வருவதுமாக இருந்தது. இதனால் ஈரோடு பஸ் நிலையம் நேற்று பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால் மாவட்டம் முழுவதும் 30 பஸ்கள் நிறுத்தப்பட்டன.

Next Story