கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை நடத்துவது குறித்து கவர்னருடன் மந்திரி உதய் சாமந்த் ஆலோசனை


கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை நடத்துவது குறித்து கவர்னருடன் மந்திரி உதய் சாமந்த் ஆலோசனை
x
தினத்தந்தி 2 Sep 2020 11:13 PM GMT (Updated: 2 Sep 2020 11:13 PM GMT)

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை நடத்துவது குறித்து கவர்னருடன் மந்திரி உதய் சாமந்த் ஆலோசனை நடத்தினார்.

மும்பை,

கொரோனா பிரச்சினை காரணமாக பல மாநிலங்கள் பல்கலைக்கழக, கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களையும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முடிவு செய்தன. ஆனால் வருகிற 30-ந் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேர்வுகள் நடத்தாமல் இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. கொரோனா நெருக்கடி இருப்பதால் தேர்வு தேதியை தள்ளிப்போடுவது குறித்து மாநிலங்கள், பல்கலைக்கழக மானிய குழுவுக்கு கோரிக்கை வைக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது.

கவர்னருடன் சந்திப்பு

இதையடுத்து தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதா அல்லது வேறு எந்த மாதிரியில் தேர்வை நடத்துவது என புதன்கிழமை (நேற்று) முடிவு எடுக்கப்படும் என உயர்கல்வி மந்திரி உதய் சாமந்த் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து கல்லூரி இறுதியாண்டு தேர்வு குறித்து ஆலோசித்தார். அப்போது உயர் கல்வி இணை மந்திரி பிரஜாக்த் தன்புரே, கூடுதல் தலைமை செயலாளர் ராஜூவ் ஜலோடா ஆகியோர் உடன் இருந்தனர்.

தற்போது கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் தேர்தலை தாமதமாக நடத்துவது குறித்து பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு கடிதம் எழுதுவது என இந்த ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story