ஊரணிபுரம் அரிசி கடையில் இருந்து விற்பனைக்கு எடுத்துச்செல்ல முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - சரக்கு ஆட்டோ டிரைவர் கைது; கடை உரிமையாளர்-மகனுக்கு வலைவீச்சு


ஊரணிபுரம் அரிசி கடையில் இருந்து விற்பனைக்கு எடுத்துச்செல்ல முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - சரக்கு ஆட்டோ டிரைவர் கைது; கடை உரிமையாளர்-மகனுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 3 Sept 2020 3:15 AM IST (Updated: 3 Sept 2020 6:34 AM IST)
t-max-icont-min-icon

ஊரணிபுரம் அரிசி கடையில் இருந்து விற்பனைக்கு எடுத்துச்செல்ல முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சரக்கு ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அரிசி கடை உரிமையாளரையும், அவரது மகனையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள ஊரணிபுரம் அண்ணாசிலை அருகே உள்ள ஒரு அரிசி கடையில் முறைகேடான முறையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரேஷன் அரிசி விற்பனைக்காக வாகனத்தில் வெளியூருக்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், சேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு சம்பந்தப்பட்ட அரிசி கடையில் இருந்து சிலர் சரக்கு ஆட்டோவில் அரிசி மூட்டைகளை ஏற்றிகொண்டு இருந்தனர். இதனைக்கண்ட போலீசார், ஆட்டோவில் ஏற்றப்பட்ட அரிசி மூட்டைகளை சோதனை செய்தனர். அப்போது அவை ரேஷன் அரிசி என்பதும், புது சாக்கு மூட்டையில் ரேஷன் அரிசியை அடைத்து விற்பனைக்காக வெளியூர் கொண்டு செல்ல இருப்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 120 மூட்டைகளில் இருந்த 3 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 36) என்பவரை கைது செய்தனர். பின்னர் சரக்கு ஆட்டோ டிரைவர் பாலாஜியையும், பறிமுதல் செய்யப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு ஆட்டோவையும் மேல் நடவடிக்கைகாக தஞ்சை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம், ஒரத்தநாடு போலீசார் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து தஞ்சை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஊரணிபுரம் அரிசிக்கடை உரிமையாளர் செல்வம் மற்றும் அவரது மகன் சிவா ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story