சேலம் மாவட்டத்தில், மேலும் 403 பேருக்கு கொரோனா - பெண் உள்பட 4 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் நேற்று மேலும் 403 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றுக்கு பெண் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நோய் தொற்றால் 135 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 403 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 282 பேர், எடப்பாடியில் 7 பேர், எடப்பாடி நகராட்சி பகுதியில் 2 பேர், காடையாம்பட்டியில் ஒருவர், மகுடஞ்சாவடியில் 5 பேர், மேச்சேரியில் 3 பேர், மேட்டூர் நகராட்சியில் 12 பேர், நங்கவள்ளியில் 4 பேர், ஓமலூரில் 8 பேர், சேலம் ஒன்றியத்தில் 6 பேர், சங்ககிரியில் 8 பேர், தாரமங்கலத்தில் 7 பேர், வீரபாண்டியில் 2 பேர், ஆத்தூர் நகராட்சியில் 8 பேர், அயோத்தியாபட்டணத்தில் 3 பேர், கெங்கவல்லியில் 7 பேர், நரசிங்கபுரம் பகுதியில் 4 பேர், பனமரத்துப்பட்டியில் 6 பேர், பெத்தநாயக்கன் பாளையத்தில் 3 பேர், தலைவாசலில் 4 பேர், வாழப்பாடியில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும், சேலம் மாவட்டத்திற்கு கள்ளக்குறிச்சி, ஈரோட்டில் இருந்து வந்த தலா இருவரும், நாமக்கல்லில் இருந்து வந்த 3 பேர், கிருஷ்ணகிரியில் இருந்து ஒருவர் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து சேலத்திற்கு வந்த ஒருவர் என மொத்தம் நேற்று ஒரே நாளில் 403 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 826 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 215 பேர் குணம் அடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
சேலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஒரு பெண் உள்பட 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று அவர்கள் 4 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Related Tags :
Next Story