காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
பென்னாகரம்,
கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, பிலிகுண்டுலு உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதன்காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 10 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து பகல் 1 மணி நிலவரப்படி வினாடிக்கு 15ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மேலும் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீர் வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story