தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை: வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள்
தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தொடர்ந்து தடை நீடிப்பதால் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
ராமேசுவரம்,
கொரோனா ஊரடங்கு காரணமாக ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை தற்போதும் நீடித்து வருகிறது. இதனால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாகவே தனுஷ்கோடி கம்பிப்பாடு அரிச்சல்முனை பகுதியானது முழுமையாக சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த 1-ந்தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் சுற்றுலா இடங்களுக்கு செல்ல தடை விலக்கப்பட வில்லை. இதன் காரணமாக சுற்றுலா பகுதிகளுக்கு இயக்கப்படும் வாகன ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை நம்பி ராமேசுவரத்தில் வாழ்ந்து வரும் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர்கள் மற்றும் கார், வேன் ஆட்டோ உள்ளிட்ட ஏராளமான வாகன தொழிலாளர்கள் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக வாழ்வாதாரம் இழந்து முழுமையாக தவித்து வருகின்றனர்.
இது பற்றி சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர் சங்க பொறுப்பாளர் நாகேந்திரன் கூறியதாவது:-
ராமேசுவரத்தில் சுற்றுலாப்பயணிகளை நம்பி வாழும் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட கார், வேன் உள்ளிட்ட வாகன ஓட்டுனர்கள், தொழிலாளர்கள் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக வாழ்வாதாரம் இழந்து கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்கி அவர்களது குடும்பத்தை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்றார்.
தனுஷ்கோடியில் சங்கு, சிப்பி மாலை கடை வைத்துள்ள வியாபாரி கோடி குமார் கூறுகையில், “சுற்றுலா பயணிகளை நம்பி தனுஷ்கோடியில் சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் சங்கு, சிப்பி மாலை மற்றும் மீன் விற்பனை செய்யும் வியாபாரிகளும் உள்ளோம். தற்போது நாங்கள் அனைவரும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமாவது தனுஷ்கோடிக்கு சுற்றுலா வாகனங்கள் வந்து செல்ல அரசு அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.
ஆட்டோ டிரைவர் மணிகண்டன் கூறுகையில், “சுற்றுலா பயணிகளை நம்பி ராமேசுவரத்தில் மட்டும் சுமார் 700-க்கும் அதிகமான ஆட்டோக்கள் உள்ளன. ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் குடும்பத்துடன் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். ஆகவே தனுஷ்கோடிக்கு வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் சென்றுவர குறிப்பிட்ட நேரம் மட்டுமாவது அனுமதி வழங்குவதற்கும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story