‘மாணவர்களின் பாகுபலியே’ என முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு


‘மாணவர்களின் பாகுபலியே’ என முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Sept 2020 11:15 AM IST (Updated: 3 Sept 2020 10:48 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் ‘மாணவர்களின் பாகுபலியே’ என முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கல்லூரி மாணவர்கள் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல், 

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு கடந்த 5 மாதங்களாக விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் குறையாததால், இதுவரை அவை திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல் கல்லூரி மாணவர்களை பொறுத்தவரை இறுதியாண்டு பருவதேர்வு எழுத இருக்கும் மாணவர்களை தவிர மற்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிலும் அரியர் பாடங்களுக்கான தேர்வுக்கு கட்டணம் செலுத்தி இருந்தாலே, தேர்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டது. இது கல்லூரி அரியர் பாடங்களை நினைத்து கவலைப்பட்ட மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்காக சமூக வலைத்தளங்களில் மாணவர்கள் தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றியை தெரிவித்து வருகின்றனர். அதையும் தாண்டி சில மாணவர்கள், முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் அச்சடித்து ஒட்டி வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல்லில் கல்லூரி மாணவர்கள் சிலர் சேர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இருவகையான போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். அதில் ஒன்றில் ‘அரியரை வென்ற அரசனே’ என்றும், மற்றொன்றில் ‘மாணவர்களின் பாகுபலியே’ என்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story