7-ந் தேதி முதல் இயக்குவதற்கு தயாராகும் விரைவு போக்குவரத்துக்கழக பஸ்கள் - பராமரிப்பு பணிகள் தீவிரம்


7-ந் தேதி முதல் இயக்குவதற்கு தயாராகும் விரைவு போக்குவரத்துக்கழக பஸ்கள் - பராமரிப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 4 Sept 2020 4:15 AM IST (Updated: 4 Sept 2020 6:59 AM IST)
t-max-icont-min-icon

7-ந் தேதி முதல் தஞ்சையில் இருந்து இயக்குவதற்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்கள் தயாராகி வருகின்றன. இதையடுத்து பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தஞ்சாவூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் ஜூன் மாதம் மாவட்டங்களுக்கு இடையேயும், பின்னர் மண்டலங்களுக்கு இடையேயும் பஸ்கள் இயக்கப்பட்டன. கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் 4-வது கட்ட ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளையடுத்து கடந்த 1-ந் தேதி முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டங்களுக்குள் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் எந்த பலனும் இல்லை என்றும் மாவட்டங்களுக்கு இடையேயும் பஸ்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இதையடுத்து வருகிற 7-ந் தேதி மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் போக்குவரத்து தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தஞ்சையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

பஸ்கள் பராமரிப்பு பணி, சுத்தப்படுத்தும் பணி, காற்று அடைக்கும் பணி, கிருமிநாசினி தெளிப்பு போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இது குறித்து தஞ்சை விரைவு போக்குவரத்துக்கழக பணிமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், “தஞ்சை விரைவு போக்குவரத்துக்கழகத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பகல் நேரத்தில் 10 பஸ்களும், இரவு நேரங்களில் 12 பஸ்களும் இயக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கு காரணமாக 7-ந் தேதி முதல் 50 சதவீத பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.

குளிர்சாதன பஸ்கள் இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளி மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படாது. தமிழகத்திற்குள் மட்டும் பஸ்கள் இயக்கப்படும். 7-ந் தேதி காலை முதல் இந்த பஸ்கள் இயக்கப்படும்”என்றார்.

Next Story