தஞ்சை அருகே, மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த மகளுக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் என்ஜினீயர் கைது


தஞ்சை அருகே, மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த மகளுக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 4 Sept 2020 4:15 AM IST (Updated: 4 Sept 2020 7:05 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த என்ஜினீயரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை அருகே உள்ள மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மூலமாக 9 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

அதன் பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு தனது உறவினரான மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எம்.கல்லுப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த மான்சிங் என்பவரின் மகன் வில்லிங்டன் கிறிஸ்டோபர்(வயது 25) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். வில்லிங்டன் கிறிஸ்டோபர், மதுரையில் சிவில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். அவ்வப்போது தஞ்சை மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள மனைவியின் வீட்டிற்கு வந்து செல்வார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தஞ்சை மாரியம்மன் கோவிலில் உள்ள மனைவியின் வீட்டிற்கு வந்து வில்லிங்டன் கிறிஸ்டோபர் தங்கி இருந்தார். அப்போது அவரது மனைவி தனது மகனை மட்டும் அழைத்துக்கொண்டு சாமான்கள் வாங்கி வருவதற்காக வீட்டில் இருந்து கடைக்கு சென்றுள்ளார்.

வீட்டில் 9 வயது மகள் டி.வி பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். தனது மனைவி கடைக்கு சென்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்த சிறுமி, தனக்கும் மகள் முறை என்பதை மறந்து வில்லிங்டன் கிறிஸ்டோபர் சிறுமியை வீட்டில் இருந்த படுக்கை அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை மிரட்டி வலுக்கட்டாயமாக அவளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பின்னர் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக சிறுமியை அவர் மிரட்டி உள்ளார். இதேபோல பல முறை சிறுமியை மிரட்டி அவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். வழக்கம்போல் கடந்த மாதமும் சிறுமிக்கு வில்லிங்டன் கிறிஸ்டோபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக தெரிகிறது.

அதன்பின்னர் வில்லிங்டன் கிறிஸ்டோபர் மதுரைக்கு சென்று அங்கு தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் சிறுமி தனது தாயிடம் தனக்கு நேர்ந்த கொடுமையான சம்பவங்களை அழுதவாறே கூறி உள்ளார். இதனையடுத்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த வில்லிங்டன் கிறிஸ்டோபரை வலைவீசி தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று வில்லிங்டன் கிறிஸ்டோபர் தஞ்சைக்கு வந்தபோது அவரை இன்ஸ்பெக்டர் கலைவாணி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Next Story