தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பரவலாக மழை - பாப்பாரப்பட்டி அருகே வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. பாப்பாரப்பட்டி அருகே வீடுகளை மழைநீர் சூழ்ந்தது
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய பரவலாக கன மழை பெய்தது. அதிகபட்சமாக தர்மபுரியில் 55 மி.மீ. மழை பெய்தது. பகுதி வாரியாக பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
தர்மபுரி-55, பாலக்கோடு-40, மாரண்டஅள்ளி-23.2, ஒகேனக்கல்-35, பென்னாகரம்-45, அரூர்-33, பாப்பிரெட்டிப்பட்டி-28, மாவட்டம் முழுவதும் மொத்த மழையளவு 259.2 மி.மீ. ஆகும். சராசரி மழையளவு-37.03 மி.மீ. ஆகும். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பெய்த மழை காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் குறைந்தது. பகலில் ஆங்காங்கே சில இடங்களில் லேசான மழை பெய்தது.
இந்த மழை காரணமாக தர்மபுரி பகுதியில் உள்ள இலக்கியம்பட்டி ஏரி, அன்னசாகரம் ஏரி, ராமாக்கள் ஏரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகளில் மழைநீர் தேங்கி நீர்மட்டம் அதிகரித்தது. பாசன கிணறுகளில் கணிசமாக தண்ணீர் தேங்கியது. விவசாய நிலங்களிலும் மழைநீர் தேங்கி ஈரப்பதம் ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் மானாவாரி பயிர் சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சாகுபடிக்கு உதவும் வகையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் சாகுபடி பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன.
பாப்பாரப்பட்டி அருகே அ.பாப்பாரப்பட்டி மோரவள்ளி பகுதியில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பாப்பாரப்பட்டி சின்னஏரிக்கு நீர்வரும் கால்வாய் இப்பகுதி வழியாக செல்கிறது. மலையூர், வேப்பிலைஅள்ளி ஊராட்சி மலையடிவாரத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் விளைநிலங்கள் வழியாக வெளியேறி அ.பாப்பாரப்பட்டியில் கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்துள்ளது.
இதனால் இப்பகுதியில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு வழியின்றி உள்ளனர். மேலும் கறவை மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை கட்டிவைக்கும் இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி இப்பகுதியில் தேங்கிநிற்கும் மழைநீரை வெளியற்றவேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் குளம், குட்டைகள் மற்றும் நீர் நிலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்த மழையால் தென்பெண்ணை ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி அணைக்கு கடந்த 31-ந் தேதி வினாடிக்கு 92 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர் மழையால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து, நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 237 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 29 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 92 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்தால், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து, நீர்மட்டம் கிடுகிடுவென உயர வாய்ப்புள்ளது. அணையின் முழு கொள்ளளவான 52 அடியை எட்டி 3 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கன மழை பெய்தது. அதிகபட்சமாக பாரூரில் 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-
சூளகிரி - 59, தேன்கனிக்கோட்டை - 51, போச்சம்பள்ளி - 46.20, பெனுகொண்டாபுரம் - 41.20, தளி - 35 , ஓசூர் - 32 , அஞ்செட்டி - 30.60, நெடுங்கல் - 30.60, ஊத்தங்கரை - 25 , கிருஷ்ணகிரி - 20.20 , ராயக்கோட்டை - 15. மொத்தம் 445.80 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
Related Tags :
Next Story