குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி பெண்கள் நாற்று நடும் போராட்டம்


குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி பெண்கள் நாற்று நடும் போராட்டம்
x
தினத்தந்தி 4 Sept 2020 3:30 AM IST (Updated: 4 Sept 2020 10:03 AM IST)
t-max-icont-min-icon

குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கக்கோரி காரைக்குடியில் பெண்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பாபுரம் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளது. மேலும் இதன் அருகே பொன்நகர் பகுதி உள்ளது. இந்நிலையில் அழகப்பாபுரம் விநாயகர் கோவில் வீதி வழியாக செல்லும் பிரதான சாலை குண்டும், குழியுமாக நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இதையடுத்து இந்த பகுதி மக்கள் இந்த சாலையை சீரமைக்கக்கோரி காரைக்குடி நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக காரைக்குடி பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக இந்த சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றதால் இந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயத்துடன் சென்றனர். இதையடுத்து நேற்று காலை இந்த குண்டும், குழியுமாக தண்ணீர் தேங்கி நின்ற இந்த சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தபோவதாக அந்த பகுதி மக்கள் அறிவித்தனர். பின்னர் சமூக ஆர்வலர் பிரகாஷ் தலைமையில் அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் மோசமான நிலையில் தண்ணீர் தேங்கி நின்ற அந்த சாலையில் நாற்று நாடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- காரைக்குடி அழகப்பாபுரம் நகர் மற்றும் அருகே உள்ள பொன்நகருக்கு செல்லும் தார்ச்சாலை மிகவும் பிரதான சாலையாக உள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. இதுதவிர பள்ளி வாகனங்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பெரியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் இந்த சாலையில் சென்று வருகின்றனர். பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று காரைக்குடி நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித பலனும் இல்லை.

கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்கனவே குண்டும், குழியுமாக உள்ள இந்த சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வரும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்கின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அடுத்தக்கட்டமாக நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story