கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயான், மனோஜ் உள்பட 4 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர் - போலீசார் தாக்கியதாக கூறியதால் பரபரப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உள்பட 4 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். போலீசார் தாக்கியதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்த மாதம் 21-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜராகாத ஜாமீனில் உள்ள 8 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதில் உதயகுமார், மனோஜ்சாமி ஆகிய இருவரை தனிப்படையினர் கேரளாவில் கைது செய்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கோவை மத்திய சிறையில் இருந்து சயான், மனோஜ், பொள்ளாச்சி சிறையில் இருந்து மனோஜ்சாமி, உதயகுமார் ஆகிய 4 பேரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பிடிவாரண்டு நிலுவையில் மற்ற 5 பேர் ஆஜராகவில்லை.
அரசு வக்கீல் நந்தகுமார் கூறுகையில், தற்போது நீதிமன்ற காவலில் உள்ள 5 பேரை வைத்து இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட நீதிபதி வடமலையிடம் தெரிவித்தார். இதற்கு எதிர்தரப்பு வக்கீல் ஆனந்த் கேரளாவில் இருந்து வர இ-பாஸ் கிடைக்கவில்லை என்றும், அதனால் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை என்றும் கூறினார்.
இதற்கிடையில், கடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகி விட்டு போலீஸ் வாகனத்தில் செல்லும் போது நிருபர்களுக்கு பேட்டி கொடுத்ததாக, சயானை போலீசார் தாக்கியதாக நீதிபதியிடம் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நீதிபதி வடமலை சென்னை ஐகோர்ட்டு வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட்டதால் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் பேட்டி கொடுக்கக் கூடாது என்றார்.
பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட 5 பேருக்கும் இ-பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. முன்னதாக கோர்ட்டுக்கு அழைத்து வரும்போது சயான் உள்பட 4 பேருக்கும் காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தலைமறைவாக உள்ள திபு உள்பட 5 பேரை தனிப்படையினர் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story