குமரியில் இயக்கப்படும் அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது 3-வது நாளில் ரூ.17 லட்சம் வசூல்


குமரியில் இயக்கப்படும் அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது 3-வது நாளில் ரூ.17 லட்சம் வசூல்
x
தினத்தந்தி 4 Sept 2020 3:44 PM IST (Updated: 4 Sept 2020 3:44 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் நேற்று பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ரூ.17 லட்சம் வருவாய் கிடைத்தது.

நாகர்கோவில்,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் சில நிபந்தனைகளுடன் மீண்டும் ஜூன் மாதம் தொடங்கியது. கொரோனா தொற்று அதிகரித்ததால் மீண்டும் பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி முதல் 8-ம் கட்ட ஊரடங்கை அரசு அமல்படுத்தியது. இதில் பஸ் போக்குவரத்துக்கு சில தளர்வுகள் அளித்தது. அதாவது, மாவட்டத்துக்குள் 1-ந் தேதி முதலும், மாவட்டத்திற்கிடையே 7-ந் தேதி முதலும் பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவித்தது.

அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள 12 அரசு பணிமனைகளில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா காரணமாக குறைந்தளவு பஸ்களே இயக்கப்படுகிறது. முதல் நாளில் 256 பஸ்களும், 2-வது நாளில் 276 பஸ்களும், நேற்று 278 பஸ்களும் இயக்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது. முதல் 2 நாட்களில் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், கடந்த 2 நாட்களை காட்டிலும் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்ட அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் நேற்று ஒரே நாளில் ரூ.17 லட்சம் வசூலாகி உள்ளது. இதன்மூலம் கடந்த 2 நாட்களை விட போக்குவரத்துக்கழகத்திற்கு வருவாய் அதிகரித்துள்ளது. முதல் நாளில் ரூ.9 லட்சமும், நேற்று முன்தினம் ரூ.12 லட்சமும் வசூலானது குறிப்பிடத்தக்கது.

தற்போது பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, படிப்படியாக பழைய நிலைக்கு வருவாய் வசூல் திரும்பும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story