3-வது நாளாக வேலைநிறுத்தம்: ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம் தொடரும் - கடலூரில் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி


3-வது நாளாக வேலைநிறுத்தம்: ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம் தொடரும் - கடலூரில் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 4 Sept 2020 6:26 PM IST (Updated: 4 Sept 2020 6:26 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்று ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கடலூரில் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறினார்.

கடலூர்,

ரேஷன் கடை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களை மருத்துவக்குழு காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும். அரசு அறிவித்தபடி ஊக்க ஊதியம், பயணப்படி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று 3-வது நாளாக கடலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவராஜன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரராஜா முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் சங்கர் உள்பட 100-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரேஷன் கடை பணியாளர்கள் தங்களின் நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தவில்லை. மாறாக கொரோனா காலத்தில் பணியில் ஈடுபடும் 25 ஆயிரம் ரேஷன் கடை பணியாளர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும். விபத்தில் உயிரிழந்த பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பெண் பணியாளர்களை அவமானப்படுத்தும் மாவட்ட வழங்கல் அலுவலர், பாலியல் தொல்லை கொடுக்கும் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தான் போராட்டம் நடத்துகிறார்கள்.

இது தொடர்பாக 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இது வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் இந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளோம். இதில் தமிழ்மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம், போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு, பேரூராட்சி பணியாளர் சங்கம், பேரூராட்சித்துறை பணியாளர் சங்கம் உள்பட 17 சங்கங்கள் ஒன்றிணைந்தது.

இந்த கூட்டமைப்பு ரேஷன் கடை பணியாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த கூட்டமைப்பினர் இன்று(வெள்ளிக்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள். நாளை (சனிக்கிழமை) மறியல் போராட்டத்துக்கு பதிலாக ரேஷன் கடை பணியாளர்கள் மாவட்ட இணைப்பதிவாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள். எங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு கு.பாலசுப்பிரமணியன் கூறினார்.

Next Story