முன்அறிவிப்பின்றி கடைகளை இடித்ததாக கூறி ஈரோடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்


முன்அறிவிப்பின்றி கடைகளை இடித்ததாக கூறி ஈரோடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Sep 2020 5:30 PM GMT (Updated: 4 Sep 2020 5:30 PM GMT)

ஈரோடு ஆர்.கே.வி.ரோடு நேதாஜி மார்க்கெட்டில் வணிகவளாகம் கட்ட முன்அறிவிப்பின்றி கடைகளை இடிப்பதாக கூறி வியாபாரிகள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் எம்.எல்.ஏ. மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஈரோடு,

ஈரோடு ஆர்.கே.வி.ரோட்டில் நேதாஜி காய்கறி மற்றும் பழங்கள் மார்க்கெட் உள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடத்தில் சந்தை செயல்பட்டு வருகிறது. மொத்தமாக 800-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த சந்தையை சுற்றிலும் மொத்த வியாபாரிகள் தங்கள் கிடங்குகளை அமைத்து உள்ளனர். 24 மணி நேரமும் காய்கறி சந்தை பரபரப்பாக இயங்கி வரும். ஈரோடு மாநகர் பகுதியின் மிகவும் நெரிசலான பகுதியாக இது இருந்தது.

எனவே இங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய சந்தை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இதற்கிடையே சந்தை அமைக்க புறநகர் பகுதியில் தனியாக மாநகராட்சி சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஆர்.கே.வி.ரோடு சந்தை தற்காலிகமாக ஈரோடு பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. 3 மாதங்களுக்கும் மேலாக சந்தை பஸ் நிலையத்தில் செயல்பட்டது.

கடைகள் இடிப்பு

போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும், வியாபாரிகள் பொதுமக்கள் இடைவெளியை கடைபிடிக்கும் வகையிலும் சுமார் ரூ.1 கோடி செலவில் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டது. அங்கு சுமார் 800 கடைகள் அமைக்கப்பட்டு, நேதாஜி மார்க்கெட்டில் கடை அமைத்திருந்தவர்களுக்கு இந்த கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தற்காலிகமாக நேதாஜி காய்கறி, பழங்கள் மற்றும் வெங்காயம், தேங்காய் மண்டிகள் உள்பட அனைத்து கடைகளும் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆர்.கே.வி.ரோடு நேதாஜி சந்தையில் மாநகராட்சி சார்பில் கடைகளை இடிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு சந்தையில் ஏற்கனவே கடை வைத்திருந்த வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். வியாபாரிகளுக்கு எந்த அறிவிப்பும் தராமல், கடைகள் இடிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. மேலும், அங்கு வணிக வளாகம் அமைக்கப்படுவதாகவும், அப்படி அமைக்கும்போது ஏற்கனவே கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு கடைகள் கிடைக்காத நிலை ஏற்படும் என்றும் தகவல்கள் பரவின. இதனால் நேதாஜி மார்க்கெட் கடைகளை இடிக்க வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாலை மறியல்

நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஆண்களும், பெண்களும் ஆர்.கே.வி.ரோட்டில் கூடினார்கள். அவர்கள் திடீரென்று ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாமல் நடுரோட்டில் நிறுத்தப்பட்டன. இதுபற்றி தகவல் அறிந்த ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும், சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டால், மாநகராட்சி ஆணையாளருடன் நேரில் பேச ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டனர். அவர்கள் ஆர்.கே.வி. ரோட்டில் இருந்து மாநகராட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாக நடந்து சென்றனர். அங்கு வியாபாரிகள் சங்க தலைவர் பி.பி.கே.பழனிச்சாமி உள்பட 5 பேர் கொண்ட குழுவினர் ஆணையாளரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

பேச்சுவார்த்தை

இதற்கிடையே தகவல் அறிந்து ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான கே.எஸ்.தென்னரசு ஆணையாளர் அலுவலகத்தில் காத்திருந்தார். எனவே வியாபாரிகளுடன் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ., ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கூட்டத்தில் மாநகர பொறியாளர் மதுரம், செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய வியாபாரிகள், வ.உ.சி.பூங்கா மைதானத்தில் போதிய வசதிகள் இல்லை. எனவே ஆர்.கே.வி.ரோடு சந்தையை மீண்டும் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கூடுதல் வசதிகளுடன் மார்க்கெட் கட்டமைக்கப்பட்டு வருவதாக எம்.எல்.ஏ. தெரிவித்தார். புதிய வளாகம் கட்டும்போது, ஏற்கனவே கடைகள் அமைத்திருந்த வியாபாரிகளுக்கு உரிய கடைகள் ஒதுக்க வேண்டும் என்று வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஒத்துழைப்பு

அதற்கு பதில் அளித்த கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ., பஸ் நிலையத்தில் இருந்து வ.உ.சி. பூங்கா மைதானத்துக்கு தற்காலிக சந்தை மாற்றப்பட்டபோது அனைவருக்கும் கடைகள் வழங்கப்பட்டது. அதுபோன்று புதிய சந்தை வளாகம் கட்டி முடிக்கப்பட்டதும் அனைவருக்கும் கடைகள் வழங்கப்படும். புதிய சந்தை வளாகம் கட்ட 2 ஆண்டுகள் ஆகும். அதுவரை வ.உ.சி. பூங்கா மைதான தற்காலிக சந்தை செயல்படும். வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கடைகள் அனைத்து வியாபாரிகளுக்கும் கிடைக்கும் என்ற உறுதிமொழியின் பேரில் தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பின்னர், இந்த தகவல் அனைத்து வியாபாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story