பாளையங்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் நூதன போராட்டம்


பாளையங்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 5 Sept 2020 3:36 AM IST (Updated: 5 Sept 2020 3:36 AM IST)
t-max-icont-min-icon

சூறைக்காற்றில் சரிந்த மின்கம்பத்தை சீரமைக்க வலியுறுத்தி, பாளையங்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

பாளையங்கோட்டை அருகே பற்பநாதபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி பாக்கியராஜ். விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள பம்புசெட்டுக்கு மின் வினியோகம் வழங்கக்கூடிய மின்கம்பமானது, கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீசிய சூறைக்காற்றில் சரிந்தது. இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தும், இன்னும் சீரமைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மின்சாரம் இன்றி, தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகின.

எனவே சரிந்த மின்கம்பத்தை உடனே சீரமைத்து மின் வினியோகம் செய்ய வலியுறுத்தி, மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் விவசாயி அந்தோணி பாக்கியராஜ் மற்றும் விவசாயிகள் நேற்று பாளையங்கோட்டை மகாராஜ நகரில் உள்ள நகர்புற மின் வினியோக உதவி மின் பொறியாளர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து படுத்து உருண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

உடனே பெருமாள்புரம் போலீசார் அங்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்சார வாரியம் சார்பில், சரிந்த மின்கம்பத்தை உடனடியாக சீரமைத்து மின்வினியோகம் வழங்குவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Next Story