பிளாஸ்மா சிகிச்சை மூலம் இறப்பு விகிதம் குறையும் - கலெக்டர் கோவிந்தராவ் பேட்டி


பிளாஸ்மா சிகிச்சை மூலம் இறப்பு விகிதம் குறையும் - கலெக்டர் கோவிந்தராவ் பேட்டி
x
தினத்தந்தி 5 Sept 2020 6:42 AM IST (Updated: 5 Sept 2020 6:42 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்மா சிகிச்சை மூலம் இறப்பு விகிதம் குறையும் என கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார்.

தஞ்சாவூர்,

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை மூலம் குணம் அடைந்த 2 பேருக்கு கலெக்டர் கோவிந்தராவ் பழங்களை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் குணம் அடைந்து வருகின்றனர். குணம் அடைபவர்களின் விகிதம் 84.2 சதவீதமாக உள்ளது. கொரோனா தொற்று குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 9 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுவினர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன் முக கவசம் இன்றி வருபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் முக கவசம் வழங்குகின்றனர்.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே பொதுமக்கள் வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். யாருக்காவது மூச்சு திணறல், காய்ச்சல், இருமல், சளி இருந்தால் உடனே அரசு மருத்துவமனைகளுக்கோ அல்லது சிகிச்சை முகாமிற்கோ சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சாதாரணமாக நினைத்து கொண்டு வீட்டில் இருந்தால் பாதிப்பு அதிகமாக வாய்ப்பு உள்ளது. 900 பல்ஸ் ஆக்சிமீட்டர் என்ற பிராணவாயு கண்டறியும் கருவிகள் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவிகளை கொண்டு வீடு, வீடாக சென்று மக்களுக்கு பிராணவாயு அளவை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 7 ஆயிரத்து 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5 ஆயிரத்து 918 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் குணம் அடைந்தவர் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். இதுவரை 30 பேர் பிளாஸ்மா தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். 5 பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். ஒருவர் பிளாஸ்மா தானம் செய்தால் 2 பேர் உயிரை காக்க முடியும். அவசர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் 24 மணிநேரமும் தடையின்றி கிடைக்க 40 செவிலியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு எதிராக வந்த புகார் குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையின் அடிப்படையில் தவறு செய்வது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 119 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் 1.7 சதவீதமாக உள்ளது. மாநிலஅளவில் ஒப்பிடும்போது இறப்பு விகிதம் தஞ்சை மாவட்டத்தில் குறைவாக உள்ளது. பிளாஸ்மா சிகிச்சை மூலம் இறப்பு விகிதம் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story