தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தடையின்றி குடிநீர் கிடைக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தடையின்றி குடிநீர் கிடைக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 5 Sept 2020 3:30 AM IST (Updated: 5 Sept 2020 6:45 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தடையின்றி குடிநீர் கிடைக்குமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் உள்ள மிகப்பழமையான மருத்துவமனைகளில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் ஒன்றாகும். சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தஞ்சை மட்டுமின்றி திருவாரூர், நாகை, அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றன்.

நோயாளிகளை பார்த்து நலம் விசாரிக்கவும் பலர் வந்து செல்வது உண்டு. இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் தங்கும் அறை கூட கட்டப்பட்டுள்ளன. நோயாளிகள், அவர்களை பார்க்க வருபவர்களின் தாகத்தை போக்க குடிநீர் குழாய் வைக்கப்பட்டுள்ளது. புறநோயாளிகள் பிரிவு செயல்படும் புதிய கட்டிடத்தின் அருகேயும், பழைய கட்டிடத்தின் எதிரே கேண்டீனுக்கு அருகேயும் குடிநீர் குழாய் உள்ளது.

கேண்டீன் அருகே உள்ள சாதாரண குடிநீர், வெந்நீர் கிடைப்பதற்கு வசதியாக குழாய் வைக்கப்பட்டு, அதை சுற்றிலும் தகரத்தினால் அடைத்து இரும்பு கதவும் வைக்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்தநிலையில் கொரோனா காலத்தில் பார்வையாளர்கள் மருத்துவமனைக்கு வந்து செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஒரே இடத்தில் பலர் கூடுவதை தவிர்க்கும் வகையில் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்காமல் இருக்க இரும்பு கதவை பூட்டு போட்டு மருத்துவமனை நிர்வாகத்தின் மூடினர்.

தற்போது ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகள், பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவர்களில் பலர், தண்ணீர் தாகத்திற்காக புதிய கட்டிடத்தின் எதிரே உள்ள குடிநீர் குழாய்க்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. பழைய கட்டிடத்தின் எதிரே உள்ள குடிநீர் குழாய் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.

அந்த குழாய் முன்பு போடப்பட்டுள்ள இரும்பு கதவு பூட்டியே உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நோயாளிகள், பார்வையாளர்களுக்கு தடையின்றி குடிநீர் வசதி கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.

Next Story