ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் ரசாயனம் கலந்த தண்ணீர் நுரையுடன் வெளியேறியதால் பரபரப்பு - துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதி
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் ரசாயனம் கலந்த தண்ணீர் நுரையுடன் வெளியேறி துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர்,
கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 844 கனஅடி தண்ணீர் வந்தது.
மேலும் அணையில் இருந்து வினாடிக்கு 728 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், தென்பெண்ணை ஆற்றில் இருந்து கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தண்ணீர் மாசடைந்து காணப்பட்டது. மேலும் அணையின் இடதுபுற வாய்க்காலில் இருந்து ரசாயனம் கலந்த தண்ணீர் நுரையுடன் வெளியேறியது.
இதன் காரணமாக கால்வாயில் ஆங்காங்கே நுரை தென்பட்டதால் துர்நாற்றம் வீசியது. இதனால், சுற்றுவட்டார பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் மற்றும் ரசாயன பொருட்களின் கழிவுநீர் கலந்து வருவதால் கெலவரப்பள்ளி அணையில் துர்நாற்றம் வீசியது. மேலும் கால்வாய் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீர் நுங்கும் நுரையுமாக காணப்பட்டது.
இதன் காரணமாக குடிநீர் மாசடையும் அபாயம் உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுநீர் கலப்பதை தடுக்க இருமாநில அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கெலவரப்பள்ளி அணையில் தண்ணீர் துர்நாற்றம் வீசியதால் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story