தேனி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டிய மழை


தேனி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டிய மழை
x
தினத்தந்தி 5 Sept 2020 11:30 AM IST (Updated: 5 Sept 2020 10:22 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்தது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி,

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தேனி நகரில் நேற்று முன்தினம் பிற்பகலில் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. பின்னர் மழை ஓய்ந்த நிலையில் இரவில் மீண்டும் பெய்யத் தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது.

தொடர்ந்து நேற்று காலையில் வெயில் அடித்த நிலையில், பிற்பகல் 3 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, வீரபாண்டி, சின்னமனூர் பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதன்பிறகும் தொடர்ந்து விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது.

இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. தேனியில் பெய்த மழையால் மலைக்கரட்டு பகுதிகளில் உள்ள ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அன்னஞ்சியில் உள்ள ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதை மக்கள் பலர் வேடிக்கை பார்த்தனர்.

தேனி கொட்டக்குடி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்து, தடுப்பணையை தாண்டி தண்ணீர் சீறிப் பாய்ந்து சென்றது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் சில நாட்கள் இந்த மழை நீடித்தால் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து விரைவில் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை கடமலைக்குண்டு, வருசநாடு ஆகிய கிராமங்களில் வறண்டு கிடந்த மூலவைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 438.1 மில்லிமீட்டர் மழை பெய்தது. சராசரி மழையளவு 36.5 மில்லிமீட்டர் ஆகும். ஒவ்வொரு பகுதிகளிலும் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:-

ஆண்டிப்பட்டி-34.8, அரண்மனைப்புதூர் -45.2, போடி- 24.6, கூடலூர்- 3.4, மஞ்சளாறு- 112, பெரியகுளம்- 104, சோத்துப்பாறை- 43, உத்தமபாளையம்- 10.3, வைகை அணை- 6, வீரபாண்டி -50.8, முல்லைப்பெரியாறு- 4 என மழையளவு பதிவாகி உள்ளது.

Next Story