நாகர்கோவிலில் 44 பேருக்கு புதிதாக கொரோனா - மேலாளருக்கு தொற்றால் வங்கி மூடப்பட்டது
நாகர்கோவிலில் புதிதாக 44 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வங்கி மேலாளருக்கு தொற்று ஏற்பட்டதால் அந்த வங்கி மூடப்பட்டது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் தினமும் 150-க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நோய் பாதிப்பு 100-க்கும் குறைவாக உள்ளது.
அதே சமயத்தில் மாவட்டத்தில் கொரோனா அதிகமாக பரவி வரும் பகுதியாக நாகர்கோவில் உள்ளது. நாகர்கோவிலில் நேற்று நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44-ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 52-ஆகவும் இருந்தது.
நாகர்கோவில் வடசேரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி மேலாளருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் வங்கி மேலாளருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், வங்கி ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதே சமயத்தில் வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் 2 நாட்களுக்கு வங்கி மூடப்பட்டது.
இதேபோல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பின்னர் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Related Tags :
Next Story