தூத்துக்குடி - சென்னை சிறப்பு ரெயிலுக்கு முன்பதிவு தொடங்கியது


தூத்துக்குடி - சென்னை சிறப்பு ரெயிலுக்கு முன்பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 5 Sep 2020 10:30 PM GMT (Updated: 5 Sep 2020 5:06 PM GMT)

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.

தூத்துக்குடி,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அதே போன்று பொது போக்குவரத்தும் முடக்கப்பட்டு இருந்தது. படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்துக்குள் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ரெயில் போக்குவரத்தை தொடங்க தமிழக அரசு தெற்கு ரெயில்வேக்கு கோரிக்கை விடுத்தது. அதன்படி தூத்துக்குடி உள்பட 6 இடங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் முன்பதிவு செய்வதற்காக நேற்று காலை முதல் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் காத்து நின்றனர்.

சமூக இடைவெளியை கடைபிடித்து மக்கள் காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்தனர். இதில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டினர். இதனால் படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் நேற்று மதியத்துக்குள் முன்பதிவு செய்யப்பட்டன. அதே நேரத்தில் ஏ.சி. வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டவில்லை. நேற்று மாலை வரை 50 சதவீதம் இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு இருந்தன.

மேலும் இன்றும் முன்பதிவு நடப்பதால் ரெயிலில் டிக்கெட்டுகள் அனைத்து பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story