பெங்களூருவில் கைவரிசை காட்டி வந்த சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் 4 பேர் கைது - ரூ.85 லட்சம் தங்க நகைகள் மீட்பு


பெங்களூருவில் கைவரிசை காட்டி வந்த சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் 4 பேர் கைது - ரூ.85 லட்சம் தங்க நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 6 Sept 2020 3:26 AM IST (Updated: 6 Sept 2020 3:26 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் பெண்களிடம் நகை பறித்து கைவரிசை காட்டி வந்த சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.85 லட்சம் மதிப்பலான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து, அவர்களிடம் தங்க சங்கிலிகள் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபடும் கும்பலை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, சங்கிலி பறிக்கும் சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தார்கள்.

இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பிரபல சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் 4 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அபு ஹைதர் அலி என்ற காஜி அலி (வயது 52), மகதி ஹசன் (45), ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சாதிக் அலி (34), கலபுரகி மாவட்டம் ரெயில் நிலையம் அருகே வசித்து வரும் ஹசீன் அலி (29) என்று தெரியவந்து உள்ளது.

கைதான 4 பேரும் இரானி கும்பலை சேர்ந்த சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் ஆவார்கள். பெங்களூரு நகரில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து, அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்று 4 பேரும் தங்க சங்கிலி பறிப்பதை தொழிலாக வைத்திருந்தனர். இவ்வாறு பெண்களிடம் பறிக்கும் தங்க சங்கிலிகளை கலபுரகி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் 4 பேரும் விற்று வந்துள்ளனர். பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகத்தின் பிற பகுதிகளிலும், தமிழ்நாடு, ஆந்திரா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் கைதான 4 பேரும் பெண்களிடம் தங்க சங்கிலிகள் பறித்து வந்தது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதாக 4 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த பின்பும் கொள்ளை மற்றும் தங்க சங்கிலி பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “பெங்களூரு உள்பட பல்வேறு மாநிலங்களில் பெண்களிடம் தங்க சங்கிலிகள் பறித்து வந்ததாக இரானி கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பல்வேறு பெண்களிடம் பறித்த 1 கிலோ 700 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.85 லட்சம் ஆகும். இவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு இருப்பதன் மூலம் பெங்களூரு நகரில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த 30 தங்க சங்கிலி பறிப்பு வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது,“ என்றார்.

கைதான 4 பேர் மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story