தஞ்சை அருகே வழி கேட்பதுபோல் நடித்து பெண் டாக்டரிடம் 10½ பவுன் சங்கிலி பறிப்பு - மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் அட்டகாசம்


தஞ்சை அருகே வழி கேட்பதுபோல் நடித்து பெண் டாக்டரிடம் 10½ பவுன் சங்கிலி பறிப்பு - மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் அட்டகாசம்
x
தினத்தந்தி 6 Sept 2020 4:15 AM IST (Updated: 6 Sept 2020 4:29 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே வழி கேட்பதுபோல் நடித்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், பெண் டாக்டரிடம் 10½ பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை அருகே உள்ள மானோஜிப்பட்டியை சேர்ந்தவர் சரண்யா(வயது 35). இவர், தஞ்சையை அடுத்த திருவையாறு அருகே உள்ள திருப்பழனத்தில் அரசு கால்நடை மருத்துவமனையில் உதவி கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நாள்தோறும் ஸ்கூட்டரில் பணிக்கு சென்று வருகிறார்.

சம்பவத்தன்று மாலையில் இவர் பணி முடிந்து திருவையாறு-பிள்ளையார்பட்டி புறவழிச்சாலையில் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது 8-ம் நம்பர் கரம்பை அருகே பெண் டாக்டர் ஓட்டி வந்த ஸ்கூட்டரின் பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் இரண்டு பேர் வந்துள்ளனர்.

அவர்களில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர், டாக்டர் சரண்யாவிடம் பூதலூருக்கு எப்படி செல்வது என மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவாறே கேட்டுள்ளார். இதனையடுத்து டாக்டர் சரண்யா, தான் ஓட்டி வந்த ஸ்கூட்டரை சாலையில் நிறுத்தியவாறு பூதலூருக்கு செல்லும் சாலையை காண்பித்துள்ளார்.

அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த நபர், டாக்டர் சரண்யா கழுத்தில் அணிந்திருந்த 10½ பவுன் இரண்டு தங்க சங்கிலிகளை பறித்து உள்ளார். திடீரென்று நடந்த இந்த சம்பவத்தால் திடுக்கிட்ட சரண்யா சுதாரிப்பதற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை வேகமாக புறவழிச்சாலையில் ஓட்டி சென்று விட்டனர். இதனையடுத்து சிறிது தூரம் அவர்களை டாக்டர் சரண்யா தனது ஸ்கூட்டரில் விரட்டி சென்றுள்ளார். ஆனால் அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். மர்ம மனிதர்கள் பறித்து சென்ற 10½ பவுன் சங்கிலியின் மதிப்பு ரூ.3¾ லட்சம் ஆகும்.

இது குறித்து டாக்டர் சரண்யா கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டரிடம் 10½ பவுன் தங்க சங்கிலிகளை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வழிகேட்பது போல் நடித்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள், பெண் டாக்டரிடம் சங்கிலியை பறித்துச்சென்ற துணிகர சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story