சுங்குவார்சத்திரம் அருகே வயரால் கழுத்தை இறுக்கி விவசாயி கொலை - சொத்துக்காக மகன்களே கொலை செய்தது அம்பலம்


சுங்குவார்சத்திரம் அருகே வயரால் கழுத்தை இறுக்கி விவசாயி கொலை - சொத்துக்காக மகன்களே கொலை செய்தது அம்பலம்
x
தினத்தந்தி 6 Sept 2020 5:11 AM IST (Updated: 6 Sept 2020 5:11 AM IST)
t-max-icont-min-icon

சுங்குவார்சத்திரம் அருகே வயரால் கழுத்தை இறுக்கி விவசாயி கொலை செய்யப்பட்டார். சொத்துக்காக மகன்களே கொலை செய்தது தெரியவந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 58). விவசாயி. இவருக்கு கோவிந்தம்மாள், என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர், 2-வது மனைவியாக பத்மாவதியும் அவர் மூலமாக ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சொத்து பிரச்சினையில் இரு குடும்பத்தினருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

நேற்று முன்தினம் மாலை தன்னுடைய முதல் மனைவி கோவிந்தம்மாளின் மகன்களுடன் ஜெயராமன் அதே பகுதியில் உள்ள வயல்வெளிக்கு சென்றார். அங்கு ஜெயராமன் மயங்கி விழுந்ததாக கூறி அவரை ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ஜெயராமனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஜெயராமனின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்து இறுதிச்சடங்குக்கு அவரது மகன்கள் ஏற்பாடு செய்தனர். அப்போது ஜெயராமனின் கழுத்தில் காயம் இருப்பதை உறவினர்கள் பார்த்து சந்தேகம் அடைந்தனர். இது குறித்து சுங்குவார் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் ஜெயராமனின் முதல் மனைவி கோவிந்தமாளின் மகன்கள் தனது நண்பர்களுடன் தந்தை ஜெயராமனை வயல்வெளிக்கு அழைத்து சென்று வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடியது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தமாளின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்களை தேடி வருகின்றனர்.

Next Story