இலங்கை மீனவர்கள் அட்டகாசம்: நடுக்கடலில் வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் - ரூ.3 லட்சம் வலைகள் கொள்ளை


இலங்கை மீனவர்கள் அட்டகாசம்: நடுக்கடலில் வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் - ரூ.3 லட்சம் வலைகள் கொள்ளை
x
தினத்தந்தி 6 Sept 2020 4:30 AM IST (Updated: 6 Sept 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீனவர்களை தாக்கி ரூ.3 லட்சம் மதிப்பிலான வலைகளை இலங்கை மீனவர்கள் பறித்து சென்றனர்.

வேதாரண்யம், 


நாகை மாவட்டத்தில் நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி, விழுந்தமாவடி, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. நடுக்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சிறைபிடித்து செல்வது, தாக்குதல் நடத்தி விரட்டி அடிப்பது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றன. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடுக்கடலில் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வேதாரண்யம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை தமிழ் மீனவர்கள் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான படகில் அதே ஊரை சேர்ந்த கோபி(வயது46), சுகுமாறன்(42), வேலவன்(45), காளிதாஸ்(20) ஆகிய 4 மீனவர்கள் கடந்த 4-ந் தேதி மதியம் 2 மணியளவில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 கடல் மைல் தூரத்தில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு 2 படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள் 6 பேர் ஆறுகாட்டுதுறை மீனவர்களை சுற்றி வளைத்து அவர்கள் படகில் வைத்திருந்த டார்ச்லைட், திசைகாட்டும் கருவி, 20 லிட்டர் டீசல், 600 கிலோ எடையுள்ள ரூ.3 லட்சம் மதிப்பிலான வலைகள் ஆகியவற்றை அறுத்து எடுத்துக்கொண்டு மீனவர்களையும் தாக்கினர்.

இதில் கோபி என்ற மீனவரின் மண்டை உடைந்தது. இதைத்தொடர்ந்து கரை திரும்பிய வேதாரண்யம் மீனவர்கள் நடுக்கடலில் நடந்த சம்பவங்கள் குறித்து மீனவ கிராம பஞ்சாயத்தாரிடம் முறையிட்டனர். பின்னர் அவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தினரிடமும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story