இளநிலை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் விவாதிக்கக் கூடாது கவர்னர் கிரண்பெடி திடீர் தடை


இளநிலை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் விவாதிக்கக் கூடாது கவர்னர் கிரண்பெடி திடீர் தடை
x
தினத்தந்தி 6 Sept 2020 6:40 AM IST (Updated: 6 Sept 2020 6:40 AM IST)
t-max-icont-min-icon

இளநிலை அதிகாரிகளுடன் நிதி விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் நேரடியாக விவாதிக்கக் கூடாது என்று கவர்னர் கிரண்பெடி தடை விதித்து இருப்பது புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி,

புதுவை அரசின் பட்ஜெட் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரவிசங்கர். இவர் நிதித்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

பட்ஜெட் பிரிவின்கீழ் பீம்ஸ் எனப்படும் பட்ஜெட் மதிப்பீடு, ஒதுக்கீடு மற்றும் கண்காணிப்பு முறை நடவடிக்கைகள் செயல்படுகின்றன. கொரோனா காரணமாக மாநில வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு தனது செலவீனங்களை கையிருப்பில் உள்ள வருவாய் மூலங்களுக்கு ஏற்ப மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பல அரசுத்துறைகள், நிதி நிலைமை பிரச்சினையின் வீரியத்தை புரிந்துகொள்ளாமல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்துவிட்டீர்கள். எனவே பீம்ஸ் அனுமதி கொடுங்கள் என கோரிக்கைகளை அனுப்பி வருகின்றன.

வருவாய் மூலதனங்களை முழுமையாக கண்டறியாத பட்சத்தில் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டாலே பணம் அளிப்பதற்கான உத்தரவாதம் அளித்துவிட்டதாக கூற முடியாது. இதை பொருட்படுத்தாமல் சில அதிகாரிகள் அமைச்சர்களிடம் சென்று பட்ஜெட் பிரிவு பில்களை செட்டில்மெண்ட் செய்ய போதுமான ஒத்துழைப்பு செய்யவில்லை என்று தவறாக தெரியப்படுத்துகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி அமைச்சர் கந்தசாமி என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நான் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு பீம்ஸ் அனுமதி அளிக்காமல் நிதி செயல்பாட்டினை முடக்குவதாக கோபமாக குற்றஞ்சாட்டினார். மேலும், சில ஆதிதிராவிடர் சங்கங்கள் நிதிச்செயலாளர் மீதும், உங்கள் மீதும் மிகுந்த கோபத்தில் உள்ளன என்றும் தலைமை செயலகத்தை அவர்கள் முற்றுகையிடவும், நிதித்துறை அதிகாரிகளை தாக்குவதற்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரித்தார். அமைச்சர் அந்த சங்கங்களை சமாதானப்படுத்தி அத்தகைய செயல்களை செய்யாதவண்ணம் கட்டுப்படுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். என்மீது எந்த தவறும் இல்லாத நிலையில் என்னை இதுபோன்ற விஷயத்தில் இழுப்பது இது 3-வது முறையாகும்.

நான் எத்தகைய பாரபட்சமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது இல்லை. இது உண்மைக்கு புறம்பானது. ஆரம்பத்தில் இத்தகைய நிகழ்வுகளை நான் எளிதாக எடுத்துக்கொண்டாலும் இதுபோன்ற மோசமான நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நடப்பது நான் சாதி அடிப்படையில் பாரபட்சமாக நடந்துகொள்கிறேன் என குறுக்கீடு செய்து வெளிப்படையான ஒரு முடிவுக்கு கொண்டு செல்கிறது.

இதன்மூலம் எனக்கு மன அழுத்தம், வேதனை ஏற்பட்டு எனது உடல்நிலை பாதிக்கிறது. நான் மிக அதிகப்படியான பணி அழுத்தத்தில் உள்ளேன். இந்த கடும் நிதி நெருக்கடி நிலைமை மற்றும் விரும்பத்தகாத சம்பவங்கள் என்னுடைய மனநிலை, உறுதித்தன்மை இழந்து என்னுடைய தினசரி நடவடிக்கை பாதிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் என்னை பட்ஜெட் பிரிவில் இருந்து மாற்றம் செய்து வேறு எங்கேனும் விரைவில் பணியமர்த்துமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு ரவிசங்கர் கூறியுள்ளார்.

பட்ஜெட் அதிகாரி ரவிசங்கரின் கடிதத்தில், நிதித்துறை செயலாளர் சுர்பீர் சிங் எழுதியுள்ள குறிப்பில், ரவிசங்கர் அவரது பணியினை நேர்மையான முறையில் எந்த சாதி வசமும் சாயாத வகையில் செய்து வருகிறார். இதுபோன்ற நிகழ்வுகள் அதிகாரிகளை தாழ்த்துவதோடு அவர்களின் தார்மீகத்தையும் கீழே இறக்கிவிடும். அவரது பணி நிதித்துறைக்கு மிக அவசியமாக தேவைப்படுவதாலும், அவருடைய அனுபவம், அறிவு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வினை கருத்தில்கொண்டு அவரை வேறு எங்கும் மாறுதல் செய்யவேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் கவர்னர் கிரண்பெடி அமைச்சர் கந்தசாமிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நிதித்துறை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் விவரங்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் இருப்பின் நீங்கள் நிதித்துறை செயலாளர் அல்லது தலைமை செயலாளருடன் பேசலாம். மாறாக இளநிலை அதிகாரிகளுடன் குறிப்பிட்ட வகையில் விவாதம் செய்து அவர்களுக்கு மனதளவில் பாதுகாப்பின்மையும், சுய பாதுகாப்பு குறித்த பயத்தையும் உருவாக்காதீர்கள்.

ரவிசங்கர் உயர்ந்த தகுதியும், தோற்ற பாகுபாடு இல்லாத கண்ணோட்டமும் கொண்டவர். அந்த அதிகாரியை மீண்டும் பணியில் இணைத்து அவருடைய பணியினை எந்தவித பயமும் பாரபட்சமுமின்றி மேற்கொள்ள செய்யுமாறு நிதி செயலாளருக்கு நான் அறிவுறுத்தி உள்ளேன். மேலும் காவல்துறை தலைவருக்கு மேற்கண்ட அதிகாரிக்கு தனிப்பட்ட பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் போதுமான பாதுகாப்பு வசதி செய்து தருமாறு அறிவுறுத்தி உள்ளேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதன் நகல் முதல்-அமைச்சர், தலைமை செயலர், நிதி செயலர், காவல் துறை தலைவர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நேரடியாக பேசுவதற்கு கவர்னர் கிரண்பெடி தடை விதித்து கடிதம் எழுதி உள்ள விவகாரம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story