சேலத்தில் வீடு தீப்பிடித்து 5 பேர் பலியானது திட்டமிட்ட சதியா? உறவினர்களிடம் போலீசார் விசாரணை
சேலத்தில் வீடு தீப்பிடித்து 5 பேர் பலியான சம்பவம் திட்டமிட்ட சதியா? என உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்,
சேலம் குரங்குசாவடி அருகே நரசோதிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 40). இவரது தம்பி கார்த்திக் (37). இவர்கள் இருவரும் அந்த பகுதியில் மர அரவை மில் வைத்து நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பங்களா வீட்டை கட்டி அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 3-ந் தேதி நள்ளிரவில் வீட்டில் ஏற்பட்ட மின் கசிவால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், கார்த்திக், அவரது மனைவி மகேஸ்வரி, மகன்கள் சர்வேஷ், மகேஷ் மற்றும் அன்பழகனின் மனைவி புஷ்பா ஆகிய 5 பேர் மூச்சுத்திணறி பலியாகினர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேட்டூர் அருகே காமனேரி கோவிலூரை சேர்ந்த சேட்டு என்கிற பாலன்-அமுதா தம்பதியின் மகன்களான அன்பழகன், கார்த்திக் ஆகியோர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். கடின உழைப்பால் முன்னேறி கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இது அவர்களுடைய உறவினர்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தீ விபத்தில் பலியான 5 பேரின் உடல்களும் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து சூரமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டி.வி.யில் மின்கசிவு ஏற்பட்டு வரவேற்பு அறை முழுவதும் இருந்த மர அலமாரிகளில் தீப்பற்றிக் கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதேசமயம் வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என்பது குறித்தும் உறவினர்களிடம் நேற்று 2-வது நாளாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே பகுதியில் வீட்டின் அருகில் சுமார் 3 ஆயிரம் சதுர அடி நிலத்தை ரூ.3 கோடிக்கு வாங்க சகோதரர்கள் இருவரும் முடிவு செய்திருந்தனர். இதில் முன்பணமாக ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பத்திரப்பதிவு நேற்று முன்தினம் காலை நடப்பதாக இருந்த நிலையில் நள்ளிரவில் நிகழ்ந்த தீ விபத்தில் கார்த்திக் தனது குடும்பத்தினருடன் பலியாகியுள்ளார். இதனால் அவர்கள் பலியான சம்பவம் திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம், அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், இந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அன்பழகன், கார்த்திக் ஆகியோரின் உறவினர்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story