மழைநீரை சேகரித்ததன் மூலம் நிரம்பி வரும் கூடலழகர் பெருமாள் கோவில் தெப்பக்குளம்


மழைநீரை சேகரித்ததன் மூலம் நிரம்பி வரும் கூடலழகர் பெருமாள் கோவில் தெப்பக்குளம்
x
தினத்தந்தி 6 Sept 2020 10:45 AM IST (Updated: 6 Sept 2020 10:40 AM IST)
t-max-icont-min-icon

பெரியார் பஸ்நிலையம் அருகே தேங்கிய மழைநீரை சேகரித்ததன் மூலம் வறண்டு கிடந்த கூடலழகர் பெருமாள் கோவில் தெப்பக்குளம் நிரம்ப தொடங்கியது.

மதுரை,

மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள நீர்நிலைகளை அபிவிருத்தி செய்யும் பொருட்டு நகரில் உள்ள குளங்கள், ஊருணிகள் தூர்வாரப்பட்டு மழைநீர் தேங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மாரியம்மன் தெப்பக்குளத்தில் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்பட்டது. அதேபோன்று தல்லாகுளம் திருமுக்குளத்தில் மழைநீர் சேகரிப்பு செய்வதற்காக மழைநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு சுற்றுப் பகுதியில் சாலைகளில் தேங்கும் மழைநீர் தடையின்றி சென்று திருமுக்குளத்தில் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்டு வருகிறது.

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் நகரின் மையப்பகுதியான டவுன்ஹால் ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு மாசி மாதம் தெப்பத்திருவிழா நடைபெறும். இந்த தெப்பக்குளம் மழைநீர் மூலம் மட்டுமே நிரப்பப்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தெப்பக்குளத்திற்கு மழை நீர் வரும் பாதைகள் ஆக்கிரமிப்பு செய்து அடைக்கப்பட்டதால் குளத்திற்குள் நீர் செல்லாமல் வறண்ட நிலையில் இருந்தது. இந்த வறண்ட தெப்பக்குளத்தில் தான் ஆண்டாண்டு காலமாக திருவிழா நடைபெற்று வந்தது.

எனவே அந்த குளத்தில் மழைநீரினை சேகரிக்கும் வகையில் பெரியார் பஸ்நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை வடக்குப்புறம், தங்கரீகல் தியேட்டர் முன்புறம், ரெயில்வே நிலையம் உள்ளிட்ட பகுதியில் தேங்கும் மழைநீரினை பயனுள்ள வகையில் தெப்பக்குளத்திற்கு கொண்டு செல்ல மாநகராட்சி மூலம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி அந்த பகுதியில் பெரிய குழாய் பதிக்கப்பட்டு அதன் மூலம் மழைநீர் தெப்பக்குளத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பணிகள் முடிக்கப்பட்டது.

மேலும் மழைநீர் செல்லும் போது ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் சுத்தம் செய்யும் வகையில் 15 மீட்டர் இடைவெளியில் 3 மீட்டர் ஆழத்தில் தொட்டிகள் அமைக்கப்பட்டது. அந்த பகுதியில் இருந்து 240 மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டு மழைநீர் எடுத்து செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மதுரையில் நல்ல மழை பெய்தது. அப்போது கட்டபொம்மன் சிலை, ரெயில்வே நிலைய பகுதியில் தேங்கிய மழைநீர் குழாய்கள் மூலம் டவுன்ஹால்ரோடு தெப்பக்குளத்தில் சேகரிக்கப்பட்டது.

இதன் மூலம் தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த தெப்பக்குளம் மழைநீர் மூலம் நிரம்பி வருகிறது. இதனால் டவுன்ஹால் ரோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மதுரை மாநகராட்சி சார்பில் இது போன்ற நீர்நிலைகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

Next Story