ஒரே நாளில் 545 பேருக்கு தொற்று உறுதி: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை கடந்தது


ஒரே நாளில் 545 பேருக்கு தொற்று உறுதி: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 6 Sept 2020 12:00 PM IST (Updated: 6 Sept 2020 11:57 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 545 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது.

கோவை,

கோவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு ஊரடங்கு தளர்வு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக படுக்கைகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கோவையில் தான் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டுள்ளது. அதன்படி நேற்று 545 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் விவரம் வருமாறு:-

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று 22 வயது ஆண், 22 வயது பெண் பயிற்சி டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தவிர இ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரியில் பணியற்றி வரும் 35 வயது ஆண் மருத்துவப் பணியாளர், சாய்பாபாகாலனி போலீஸ் நிலையத்தை சேர்ந்த 44 வயது பெண் போலீஸ், 51 வயது ஆண் போலீஸ், சட்டக் கல்லூரி குடியிருப்பை சேர்ந்த 26 வயது பெண் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களைத் தவிர போத்தனூரில் 50 பேர், சிங்காநல்லூரில் 27 பேர், குனியமுத்தூரில் 25 பேர், சூலூரில் 23 பேர், மேட்டுப்பாளையத்தில் 16 பேர், காரமடையில் 15 பேர், செல்வபுரத்தில் 13 பேர், ரத்தினபுரியில் 12 பேர், காந்திபுரத்தில் 10 பேர் என மொத்தம் 545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது.

கோவை விமான நிலையம் வழியாக கடந்த மே மாதம் 9-ந் தேதி முதல் கடந்த 3-ந் தேதி வரை மொத்தம் 5 ஆயிரத்து 457 பேர் வந்துள்ளனர். அவர்களில் 19 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்று வந்த 64 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் கோவையில் இதுவரை 323 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

கோவையில் அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா கண்காணிப்பு மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 366 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்கள். மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 358 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 729 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story