விழுப்புரம் புதிய ரெயில்வே கோட்டமாக உருவாக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு


விழுப்புரம் புதிய ரெயில்வே கோட்டமாக உருவாக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 6 Sep 2020 12:53 PM GMT (Updated: 6 Sep 2020 12:53 PM GMT)

விழுப்புரம் புதிய ரெயில்வே கோட்டமாக உருவாக்கப்படுமா? என்று பயணிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் ரெயில் நிலையம், தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகவும், தலைநகரான சென்னையையும், தென்தமிழகத்தினையும் இணைக்கும் மிக முக்கியமான இணைப்பு நிலையமாக திகழ்கிறது. தென்னக ரெயில்வேயின் 5 முக்கியமான ரெயில் நிலையங்களில் ஒன்றாக விழுப்புரம் ரெயில் நிலையம் சிறந்து விளங்கி வருகிறது.

இந்த ரெயில் நிலையம் 20 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு 6 நடைமேடைகள் உள்ளன. இந்த 6 நடைமேடைகளையும் 2 பாலங்கள் இணைக்கின்றன. இது கிழக்கு புதுச்சேரி சாலை, கீழ்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ளது. விழுப்புரம் ரெயில் நிலையத்திலிருந்து பழைய பஸ் நிலையம் 1 கி.மீ. தொலைவிலும், புதிய பஸ் நிலையம் 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன. மேலும் 40 கிலோ மீட்டர் தொலைவில் புதுச்சேரி ரெயில் நிலையமும் அமைந்துள்ளது.

விழுப்புரம் ரெயில் நிலையத்திலிருந்து 5 ரெயில்வே நிலையங்களின் இணைப்புகள் பிரிந்து செல்கின்றன. அதாவது மின்சார மயமாக்கப்பட்ட இரட்டை அகல ரெயில்பாதை இணைப்பு சென்னை எழும்பூரை நோக்கிச்செல்கிறது. மின்சார மயமாக்கப்பட்ட அகல ரெயில்பாதை இணைப்புகளில் ஒன்று விருத்தாசலம், அரியலூர் வழியே திருச்சியை நோக்கியும் மற்றொரு இணைப்பு பாதை கடலூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சியை நோக்கியும் செல்கிறது. இதுதவிர மின்சார மயமாக்கப்பட்ட அகல ரெயில்பாதை இணைப்பு திருவண்ணாமலை, ஆரணி, வேலூர் கண்டோன்மென்ட் வழியாக காட்பாடி வரையும், மற்றொன்று புதுச்சேரியை நோக்கியும் செல்கிறது.

இங்குள்ள விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் 90 முதல் 100 ரெயில்களின் போக்குவரத்து உள்ளது. இதனால் இந்த ரெயில் நிலையம் எப்போதுமே பரபரப்பாகவும், பயணிகள் கூட்டம் மிகுந்தும் காணப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் விடிய, விடிய ரெயில்கள் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்வதால் விழுப்புரம் நகரத்தை ‘விழிமா நகரம்’ என்றும் அழைப்பதுண்டு.

இத்தகைய சிறப்புமிக்க விழுப்புரம் ரெயில் நிலையம் தற்போது திருச்சி கோட்டத்தின் கீழ் உள்ளது. விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ரெயில்வே கோட்டத்தை அமைக்க வேண்டும் என்றும் இதன் மூலம் விழுப்புரத்தில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கு கூடுதல் ரெயில்களை இயக்கினால் விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு வேலைக்கு சென்று வரவும், மருத்துவமனைகள் உள்ளிட்ட பிற அத்தியாவசிய தேவைகளுக்கு சென்று வரவும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். எனவே விழுப்புரத்தை தனி கோட்டமாக அறிவித்து கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்பது இங்குள்ள பயணிகளின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இதுபற்றி விழுப்புரம் ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர், மத்திய ரெயில்வே துறை மந்திரி பியூஷ்கோயலுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் இருந்த விழுப்புரம் துரித வளர்ச்சி பெற்றிடவும், நிர்வாகம் சீரடையவும் புதிய மாவட்டமாக செயல்பட்ட நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் செயல்பட்டு வருகிறது.

எனவே விழுப்புரத்தை சுற்றியுள்ள புதுச்சேரி, காரைக்கால், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நெய்வேலி, விருத்தாசலம், சின்னசேலம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், அரக்கோணம் ஆகிய பகுதிகளை இணைத்து புதிய விழுப்புரம் கோட்டமாக செயல்பட வைக்கலாம். இது இப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் நீண்டகால கனவாகும்.

சென்னை மற்றும் திருச்சி கோட்டங்கள் பல வகையில் நல்ல வளர்ச்சியடைந்துள்ள நிலையில் விழுப்புரமும் புதிய கோட்டமாக உருவாகினால் நல்ல வளர்ச்சி பெறுவதுடன், பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்திடும். விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் அமைக்க விழுப்புரம் ரெயில் நிலைய வளாகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் மற்றும் போதுமான இடவசதியும் உள்ளது. எனவே விழுப்புரத்தை புதிய ரெயில்வே கோட்டமாக அறிவிக்க ரெயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story