வீடு வீடாக தொற்று பரிசோதனை செய்வதற்கு மக்கள் ஒத்துழைக்கிறார்கள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்


வீடு வீடாக தொற்று பரிசோதனை செய்வதற்கு மக்கள் ஒத்துழைக்கிறார்கள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்
x
தினத்தந்தி 7 Sept 2020 2:46 AM IST (Updated: 7 Sept 2020 2:46 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் வீடு வீடாக சென்று கொரோனா தொற்று பரிசோதனை செய்வதில் மக்கள் ஒத்துழைப்பு தருகிறார்கள் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரியாக நாள்தோறும் 500 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள காட்டாமணிக்குப்பம், ரொசாரியோ வீதியில் வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை ஊழியர்கள் நேற்று காலை கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முகாமை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சுகாதார துறை இயக்குனர் மோகன்குமார், துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செல்வி மற்றும் களப்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

4 வாகனங்கள்

தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுகாதாரத்துறையினர் கடந்த 2 நாட்களாக வீடு வீடாக சென்று உமிழ்நீர் பரிசோதனை செய்து வருகின்றனர். இன்று (நேற்று) முத்தியால்பேட்டை பகுதியில் வீடு வீடாக பரிசோதனை செய்யப்பட்டது. 1½ மணி நேரத்தில் 200 பேரின் உமிழ்நீர் சேகரிக்கப்பட்டது. மக்கள் ஆர்வமுடன் வந்து பரிசோதனை செய்து கொள்கின்றனர். நானும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ளும்படி வலியுறுத்தினேன். தொகுதி வாரியாக முகாம்கள் நடத்தி பரிசோதனைக்கு அழைத்தால் மக்கள் வர மறுக்கின்றனர்.

முகாம்களில் காணப்படும் கூட்டத்தால் கொரோனா வந்து விடுமோ என மக்கள் அச்சப்படுகின்றனர். அதே நேரத்தில் வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்வதற்கு ஒத்துழைப்பு தருகின்றனர். இந்தநிலை நீடித்தால் தினமும் 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யலாம். இதற்காக 4 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story