தூத்துக்குடியில் இருந்து இன்று முதல் வெளிமாவட்டங்களுக்கு செல்ல தயாராகும் அரசு பஸ்கள்


தூத்துக்குடியில் இருந்து இன்று முதல் வெளிமாவட்டங்களுக்கு செல்ல தயாராகும் அரசு பஸ்கள்
x
தினத்தந்தி 7 Sept 2020 5:43 AM IST (Updated: 7 Sept 2020 5:43 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து இன்று முதல் வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு அரசு பஸ்கள் தயாராக உள்ளன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொது போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டு இருந்தது. படிப்படியாக ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் விமானம், ரெயில், பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டத்துக்குள் மட்டும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இதைத் தொடர்ந்து இன்று(திங்கட்கிழமை) முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் பஸ்களை இயக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே 102 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் வெளிமாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் முழு அளவில் அனைத்து பஸ்களையும் இயக்குவதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். இதற்காக அனைத்து பஸ்களும் கிருமி நாசினி தெளித்து தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

விரைவு போக்குவரத்து கழக பஸ்கள்

இதே போன்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சென்னை உள்பட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 70 பஸ்கள் உள்ளன. இதில் தினமும் 34 பஸ்கள் பல்வேறு ஊர்களுக்கு இயங்கி வந்தன. தற்போது சுமார் 5½ மாதங்களுக்கு பிறகு மீண்டும் விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயங்க உள்ளன. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ்களும் கிருமிநாசினி தெளித்து தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. பஸ்கள் வெளியில் செல்லும் போது, மீண்டும் கிருமி நாசினி தெளிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

26 பயணிகள்

ஒவ்வொரு பஸ்சிலும் 40 பேர் பயணம் செய்யலாம். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் ஒரு பஸ்சில் அதிகபட்சமாக 26 பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு இருக்கை விட்டு பயணிகள் அமருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். பஸ்சில் கைழுவும் திரவமும் வைக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் பயணிகள் கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த பஸ்களில் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி உள்ளது. இதுவரை தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்கு 3 பஸ்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. திருச்செந்தூரில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்டு வந்த பஸ் ஓசூர் வரை இயக்கப்படுகிறது. இந்த பஸ்சிலும் பயணிகள் முழுமையாக முன்பதிவு செய்து உள்ளனர்.

இது தவிர பயணிகள் வருகை அதிகரித்தால் கூடுதல் பஸ்களை உடனடியாக இயக்குவதற்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் தயாராக இருப்பதாகவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story