மாவட்டங்களுக்கிடையே இன்று முதல் போக்குவரத்து: விழுப்புரம் கோட்டத்தில் 2 ஆயிரம் பஸ்கள் இயக்க ஏற்பாடு அதிகாரி தகவல்


மாவட்டங்களுக்கிடையே இன்று முதல் போக்குவரத்து: விழுப்புரம் கோட்டத்தில் 2 ஆயிரம் பஸ்கள் இயக்க ஏற்பாடு அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 7 Sept 2020 11:18 AM IST (Updated: 7 Sept 2020 11:18 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டங்களுக்கிடையே இன்று முதல் போக்குவரத்து: விழுப்புரம் கோட்டத்தில் 2 ஆயிரம் பஸ்கள் இயக்க ஏற்பாடு அதிகாரி தகவல்

விழுப்புரம்,

மாவட்டங்களுக் கிடையே இன்று முதல் போக்குவரத்து தொடங்க உள்ளது. இதில் விழுப்புரம் கோட்டத்தில் இருந்து 2 ஆயிரம் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 8-ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருந்து வருகிற நிலையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்குள் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில் மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதனடிப்படையில் இன்று (திங்கட்கிழமை) முதல் மாவட்டங்களுக்கிடையே பஸ் போக்குவரத்து தொடங்க உள்ளது. இதற்காக விழுப்புரம் பணிமனையில் உள்ள பஸ்கள் அனைத்தும் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் நேற்று விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில் சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்றது. இதில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியை மேற்கொண்டு, பிளிச்சிங் பவுடரை போட்டனர். மேலும் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.

இதற்கிடையே மாவட்டங்களுக்கிடையே பஸ் இயக்குவது குறித்து, போக்குவரத்து அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 6 மண்டலங்களை சேர்ந்த 10 மாவட்டங்களில் கடந்த 1-ந்தேதி முதல் 501 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இன்று(திங்கட்கிழமை) முதல் 70 சதவீத பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். அதாவது 2 ஆயிரம் பஸ்களை இயக்க விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.

இதையொட்டி விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அரசு போக்குவரத்துக்கழகத்தின் 11 பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களை பழுதுநீக்கி, சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அதேபோல் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள புதுச்சேரி, சென்னை, சேலம் பஸ்கள் நிற்கும் இடத்திலும் சுத்தம் செய்யும் பணி மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

Next Story