புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் குளிக்க வந்த சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பிய போலீசார்


புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் குளிக்க வந்த சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பிய போலீசார்
x
தினத்தந்தி 7 Sept 2020 12:09 PM IST (Updated: 7 Sept 2020 12:09 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினர்.

பெரும்பாறை,

கொடைக்கானல் கீழ்மலையில் பெரும்பாறை அருகே இயற்கை எழில்மிகுந்த புல்லாவெளி நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்கிறது. பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, தடியன்குடிசை, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை, பாச்சலூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் ஊற்றுத்தண்ணீர் எடுத்து, அவை சிறு அருவியாக கொட்டி வருகின்றன. அவ்வாறு கொட்டும் தண்ணீர் குடகனாற்றில் பெருக்கெடுத்து, புல்லாவெளி அருவியில் ஆர்ப்பரித்து விழுகிறது. கடந்த 2 வாரத்திற்கும் மேலாக புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் தடையை மீறி அங்கு குளித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு படையெடுத்தனர். மதுரை, திண்டுக்கல் மற்றும் பக்கத்து நகரங்களை சேர்ந்த ஏராளமானோர் கார், மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாண்டிக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜா தலைமையிலான போலீசார் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதைக்கு வந்தனர். அப்போது, நீர்வீழ்ச்சிக்கு செல்ல அனுமதி கிடையாது என்று அங்கு வந்த சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பினர்.

கொரோனா ஊரடங்கு ஒருபுறம் இருக்கும் நிலையில், புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் கடந்த 6 மாதங்களில் 8 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். இதில் 2 பேரின் உடலை மீட்க முடியவில்லை. இப்பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் தண்ணீர் அதிக அளவில் விழுகிறது. எப்போது வேண்டுமானாலும் திடீர் வெள்ளம், நிலச்சரிவு ஏற்படலாம். எனவே சுற்றுலா பயணிகள் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கினர். இதையடுத்து அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story