பிரபல எலெக்ட்ரானிக்ஸ் கடை இயக்குனர் ‘லிப்ட்’ விபத்தில் பலி


பிரபல எலெக்ட்ரானிக்ஸ் கடை இயக்குனர் ‘லிப்ட்’ விபத்தில் பலி
x
தினத்தந்தி 8 Sept 2020 12:54 AM IST (Updated: 8 Sept 2020 12:54 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் பிரபல எலெக்ட்ரானிக்ஸ் கடை இயக்குனர் ‘லிப்ட்’ விபத்தில் சிக்கி பலியானார்.

மும்பை,

மும்பை, நவிமும்பை, தானே, புனேயில் பல்வேறு இடங்களில் கோகினூர் என்ற பெயரில் பிரபல எலெக்ட்ரானிக்ஸ் கடை செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனராக இருந்தவர் விஷால் மேவானி(வயது46). இவர் தென்மும்பை ஜாஸ்லாக் ஆஸ்பத்திரி அருகில் வசித்து வந்தார். இவருக்கு நேற்று முன்தினம் பல் வலி ஏற்பட்டது.

இந்தநிலையில் ஒர்லி போச்கன்வாலா ரோட்டில் உள்ள நண்பரின் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கு தெரிந்த பல் டாக்டர் ஒருவர் வருவதாக கூறியிருந்தார். அவரிடம் சிகிச்சை பெறுவதற்காக அன்று மாலை 4.30 மணியளவில் விஷால் மேவானி நண்பரின் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றார்.

லிப்டில் சிக்கினார்

இதில் அவர் தரைதளத்தில் நின்று கொண்டு லிப்டுக்காக காத்திருந்தார். இந்தநிலையில் ‘லிப்ட்’ தரை தளத்துக்கு வருவதற்கு முன்பாகவே அதன் கதவு திறந்தது.

இதை கவனிக்காமல் விஷால் மேவானி உள்ளே சென்றார். பின்னர் சுதாரித்து கொண்டு அவர் வெளியே வருவதற்குள் மேலே இருந்து கீழே வந்த ‘லிப்ட்’ அவரை நசுக்கியது. இது குறித்து கட்டிடவாசிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் தீயணைப்பு துறையினருடன் விரைந்து சென்று, லிப்டில் சிக்கியிருந்த விஷால் மேவானியை மீட்டு பீரிச் கேண்டி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு விஷால் மேவானியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இந்த சம்பவம் குறித்து ஒர்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

பிரபல எலெக்ட்ரானிக்ஸ் கடை இயக்குனர் ‘லிப்ட்’ விபத்தில் பலியான சம்பவம் மும்பையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story