போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 2-வது நாளாக நடிகை ரியாவிடம் விசாரணை


போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 2-வது நாளாக நடிகை ரியாவிடம் விசாரணை
x
தினத்தந்தி 8 Sept 2020 1:06 AM IST (Updated: 8 Sept 2020 1:06 AM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 2-வது நாளாக நடிகை ரியாவிடம் விசாரணை நடத்தினர்.

மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகரின் மரணம் குறித்து அவரது தந்தை கே.கே.சிங் பீகார் போலீசில் அளித்த புகாரை தொடர்ந்து, தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய 3 முகமைகள் விசாரணை நடத்தி வருகின்றன.

போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது, விற்றது தொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தியின் தம்பி சோவிக், நடிகர் சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

2-வது நாளாக...

போதைப்பொருள் கும்பலுடன் நடிகை ரியாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடிகை ரியாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் வெளியே வந்த நடிகை ரியா, தனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்றும், சுஷாந்த் சிங்கிற்கு அந்த பழக்கம் இருந்தது என்றும் நிருபர்களிடம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்தநிலையில் 2-வது நாளாக நேற்று காலை 9.30 மணியளவில் நடிகை ரியா பல்லர்டு எஸ்டேட்டில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். பத்திரிகையாளர் அங்கு கூடுவதை தவிர்க்க தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

8 மணி நேரம் விசாரணை

இந்தநிலையில் நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரியாவிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார்.

இந்தநிலையில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) போதைப்பொருள் தடுப்பு பிரிவு நடிகை ரியாவிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story