பெங்களூரு போலீசார் அதிரடி நடவடிக்கை ரூ.1.58 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் போலீஸ்காரர் மகன் உள்பட 28 பேர் கைது


பெங்களூரு போலீசார் அதிரடி நடவடிக்கை ரூ.1.58 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் போலீஸ்காரர் மகன் உள்பட 28 பேர் கைது
x
தினத்தந்தி 7 Sep 2020 8:22 PM GMT (Updated: 7 Sep 2020 8:22 PM GMT)

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக போலீஸ்காரர் மகன் உள்பட 28 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.58 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவது அதிகரித்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக கன்னட திரை உலகில் விருந்து நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் பெங்களூரு நகர் முழுவதும் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில், பெங்களூரு கிழக்கு மற்றும் தென்கிழக்கு மண்டல போலீசார், போதைப்பொருட்கள் விற்கும் கும்பலை கைது செய்திருந்தனர்.

அந்த கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீஸ் கமிஷனர் கமல்பந்த், கிழக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பட்டதாரி வாலிபர்

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். நகர் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போதைப்பொருள் விற்பனையை தடுக்கவும், போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கும்பலை கைது செய்வதில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அதன்படி, பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் உள்ள அல்சூர், ராமமூர்த்திநகர், டி.ஜே.ஹள்ளி, பானசாவடி போலீசார் நகரில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 11 வியாபாரிகளை கைது செய்துள்ளனர்.

கைதான 11 பேரிடம் இருந்து 48 கிலோ கஞ்சா, 25 கிராம் பிரவுன்சுகர், 980 எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகள், 450 கிராம் போதை ஆயில், 1,100 எல்.எஸ்.டி. போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.90 லட்சம் ஆகும். இவற்றில் குறிப்பாக அல்சூர் போலீசார், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பி.சி.ஏ. பட்டதாரி வாலிபரான கேவல் லோகித், முகமது ஹபியுல்லா, அசிஷ் நியாஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

விருந்து நிகழ்ச்சிகளுக்கு விற்பனை

இவர்களில் கேவல் லோகித் ஆரம்பத்தில் போதைப்பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளார். அதன்பிறகு, பெங்களூரு, கோவாவில் நடைபெற்ற போதைப்பொருட்கள் பயன்படுத்தும் விருந்தில் கலந்து கொண்டு வந்துள்ளார். இதற்காக அவருக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இதையடுத்து, போதைப்பொருட்கள் விற்பனையில் அவர் ஈடுபட்டுள்ளார். இதற்காக டார்க் நெட் என்ற இணையதளம் மூலமாக எம்.டி.எம்.ஏ. உள்ளிட்ட போதைப்பொருட்களை வாங்கி உள்ளார். மேலும் நைஜீரியாவை சேர்ந்தவர்களுடன் சேர்ந்தும் போதைப்பொருள் விற்பனையில் கேவல் லோகித் ஈடுபட்டுள்ளார்.

கல்லூரி மாணவர்களிடமும், விருந்து நிகழ்ச்சிகளிலும் போதைப்பொருட்களை விற்பனை செய்து கேவல் லோகித் பணம் சம்பாதித்து வந்திருக்கிறார். கேவல் லோகித்துடன் சேர்ந்து முகமது ஹபியுல்லா, அசிஷ் நியாசும் டார்க் நெட் இணையதளம் மூலமாக போதைப்பொருட்களை வாங்கி கல்லூரி மாணவர்களுக்கும், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கும் விற்று வந்துள்ளனர். கைதான 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போலீஸ்காரர் மகன் கைது

இதுபோல, தென்கிழக்கு மண்டலத்தில் உள்ள பரப்பனஅக்ரஹாரா, எலெக்ட்ரானிக் சிட்டி, பண்டே பாளையா, திலக்நகர், கோரமங்களா, சுத்தகுண்டே பாளையா ஆகிய போலீசார் நகரில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 17 பேரை கைது செய்திருக்கிறார்கள். கைதானவர்களிடம் இருந்து 187 கிலோ கஞ்சா, 950 கிராம் ஹசீஷ் ஆயில், 5 எம்.டி.எம்.ஏ. மாத்திரைகள், 5 எல்.எஸ்.டி. மாத்திரைகள், 8 ஹைட்ரோ கஞ்சா செடிகள், 3 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.68 லட்சம் ஆகும்.

தென் கிழக்கு மண்டலத்தில் உள்ள பரப்பனஅக்ரஹாரா போலீசார் திறமையாக செயல்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த போலீஸ்காரர் மகன் உள்பட 2 பேரை கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் பெயர் விஸ்வாஸ், அம்பரீஷ் என்பதாகும். இவர்களில் விஸ்வாஸ் பெங்களூரு நகரில் பணியாற்றும் ஒரு போலீஸ்காரரின் மகன் ஆவார். அவர், சிக்கன் கபாப் விற்பனை செய்யும் ஓட்டல் நடத்தி வருகிறார். அவருக்கு கஞ்சா விற்பனை செய்யும் அம்பரீசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ரூ.1.58 கோடி மதிப்பு

அதன்பிறகு, அம்பரீசிடம் இருந்து மொத்தமாக கஞ்சாவை விலைக்கு வாங்கி தனக்கு தெரிந்தவர்களுக்கு விஸ்வாஸ் விற்று வந்துள்ளார். கஞ்சா விற்றதில் எளிதில் பணம் கிடைத்ததால், அதில் முழுமையாக கவனம் செலுத்தி வந்துள்ளார். ஆந்திரா, கேரளாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விஸ்வாசிடம் அம்பரீஷ் விற்பனை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதன்படி, காரில் 165 கிலோ கஞ்சாவை அம்பரீஷ் கடத்தி வந்து விஸ்வாசிடம் விற்க முயன்ற போது, அவர்கள் 2 பேரையும் பரப்பனஅக்ரஹாரா போலீசார் கைது செய்திருந்தனர். கிழக்கு மற்றும் தென்கிழக்கு மண்டல போலீசார் ஒட்டு மொத்தமாக போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 28 பேரை கைது செய்திருக்கிறார்கள்.

ஒட்டு மொத்தமாக ரூ.1 கோடியே 58 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 28 பேரிடம் இருந்து பெரிய அளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. போலீசார் திறமையாக செயல்பட்டு அந்த கும்பலை கைது செய்துள்ளதால், அதனை விற்பனை செய்யப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசாருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். கிழக்கு மற்றும் தென் கிழக்கு மண்டல போலீசாருக்கு தலா ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story