புதுவையில் 11 தெருக்களில் ஒருவாரம் உள்ளூர் ஊரடங்கு இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை அமல்


புதுவையில் 11 தெருக்களில் ஒருவாரம் உள்ளூர் ஊரடங்கு இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை அமல்
x
தினத்தந்தி 8 Sept 2020 2:54 AM IST (Updated: 8 Sept 2020 2:54 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை 11 தெருக்களில் உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அம்சமாக 32 இடங்கள் உள்ளூர் ஊரடங்கு பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதற்கு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாவட்ட கலெக்டரிடம் அந்த பகுதியை முழுவதும் கட்டுப்படுத்த வேண்டாம். அதிகம் பாதிக்கப்பட்ட தெருக்களை மட்டும் கட்டுப்படுத்தினால் போதும். ஏற்கனவே வெளியிட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

11 தெருக்களுக்கு உள்ளூர் ஊரடங்கு

இந்த நிலையில் புதுவை மாவட்ட கலெக்டர் அருண் நேற்று இரவு புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தெருக்களில் உள்ளூர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த உள்ளூர் ஊரடங்கு அறிவிக்கப்பட் டுள்ளது.

மேட்டுப்பாளையம் மங்கலட்சுமி நகரில் உள்ள 5-வது குறுக்குத்தெரு விரிவாக்கம், சண்முகா புரம் அண்ணாதெரு, வீமன்நகர் ஓடை வீதி, முதலியார்பேட்டை வெள்ளலார் தெரு 2-வது குறுக்கு, உருளையன்பேட்டை செங்குந்தர் வீதி, விடுதலை நகர் ஜி பிளாக், ஒதியஞ்சாலை புதுநகர் மெயின்ரோடு, லாஸ்பேட்டை அசோக்நகர் பாரதிதாசன் வீதி, கிருஷ்ணாநகர் 14-வது குறுக்கு, கோரிமேடு ஜிப்மர் ஜி குடியிருப்பு, ரெட்டியார்பாளையம் பூமியான்பேட் பாவாணர் நகர் ஆகிய 11 தெருக்கள் உள்ளூர் ஊரடங்கு பகுதிக்குட் பட்டதாகும்.

7 நாட்கள்

இந்த பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை ஒரு வாரத்துக்கு கட்டுப்பாடு அமலில் இருக்கும். இந்த பகுதிகளை மருத்துவ அதிகாரிகள் கண்காணிப்பார்கள். இந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட பகுதியில் அனைத்து கடைகள், தொழிற்சாலைகள், தனியார் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். காய்கறி, மளிகை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்து இருக்கலாம். வெளியாட்கள் யாரும் இந்த பகுதியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த பகுதியில் வாகனங்கள் செல்லவும் அனுமதி இல்லை. அவசர தேவைக்காக மட்டும் மக்கள் வெளியே வரலாம். அரசு அலுவலர்கள் சென்று வர விதிவிலக்கு உண்டு.

அரசு அலுவலகம், பால் பூத், மருத்துவமனைகள் வழக்கம் போல் செயல்படலாம். இந்த பகுதிகளில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பொதுமக்கள் பரிசோதனை செய்து கொள்ளலாம். இங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். விதிகளை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story