சிவகிரி அருகே நிட்சோபதி ஆற்றில் மணல் அள்ள எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு


சிவகிரி அருகே நிட்சோபதி ஆற்றில் மணல் அள்ள எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 7 Sep 2020 10:53 PM GMT (Updated: 7 Sep 2020 10:53 PM GMT)

சிவகிரி அருகே நிட்சோபதி ஆற்றில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

தென்காசி,

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு தரப்பினர் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர். சிவகிரி தாலுகா நெற்கட்டும்செவலை அடுத்த அம்மன்குளம் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து, மனு வழங்கினர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எங்களது ஊரில் நிட்சோபதி ஆற்றில் கடந்த 1, 2 ஆகிய தேதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் சிலர் மணல் அள்ளிக்கொண்டு இருந்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் ஊர் தலைவர்கள் கேட்டபோது, இனி மணல் அள்ள வரமாட்டோம் என்று கூறி சென்று விட்டனர். ஆனால் கடந்த 5-ந்தேதி அதே அரசு அதிகாரி தலைமையில், 7 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் எந்திரம் மூலம் மீண்டும் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, மாவட்ட கலெக்டர் அனுமதியின்பேரில்தான் மணல் அள்ளுகிறோம் என்றனர். உடனே இதுபற்றி காவல்துறையில் புகார் செய்தபோது, அவர்கள் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், எந்த அனுமதியும் பெறாமல் ஆற்றில் மணல் அள்ளியது தெரியவந்தது. எனினும் இதுகுறித்து போலீசாரும் வழக்குப்பதிவு செய்யவில்லை. நிட்சோபதி ஆற்றின் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்து வருகிறோம். இங்கு மணல் அள்ளினால் விவசாயம் பாதிக்கப்படும். எனவே நிட்சோபதி ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குடிநீர்

ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் பா.ஜ.க. நகர தலைவர் சிம்சன் தலைமையில் அந்த ஊர் பொதுமக்கள் மனு கொடுத்தனர். அதில், ‘எங்களது கிராமத்தில் மக்கள்தொகை சுமார் 12 ஆயிரம் ஆகும். சுமார் 4 ஆயிரம் வீடுகள் உள்ளன. எங்களது தேவைக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது தற்போது எங்களுக்கு போதவில்லை. எங்களது ஊரில் பஞ்சாயத்து அலுவலகத்தின் உள்ளே புதிதாக தரை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு உள்ளது. அந்த தொட்டியில் இருந்து சுமார் 144 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்போவதாக ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். அந்த திட்டத்தில் எங்களது கிராமத்தையும் சேர்த்து அதில் இருந்து கூடுதலாக 3 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.

தென்காசி பா.ஜ.க. மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துப்பாண்டியன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராமராஜா உள்ளிட்டோர் கொடுத்துள்ள மனுவில், பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பல இடங்களில் மோசடி நடைபெற்று உள்ளது. எனவே தென்காசி மாவட்டத்தில் தீவிரமாக ஆய்வு செய்து உண்மையான விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைக்கவும், குற்றவாளிகள் இருந்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.

100 நாள் வேலை

மேலநீலிதநல்லூர் ஒன்றியம் வடக்கு பனவடலி பஞ்சாயத்து திருமலாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், ‘எங்களது கிராமத்தில் இந்த ஆண்டு 100 நாள் வேலைத்திட்டம் செயல்படவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து முறையிட்ட பிறகு நேற்று முதல் தொடங்கிய வேலையிலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. கடந்த 6 மாதமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 100 நாள் வேலை உறுதி செய்ய வேண்டும். 50 வயது கடந்தவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ் புலிகள் கட்சி கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் தமிழ்குமரன் கொடுத்துள்ள மனுவில், ‘அரியப்பபுரம் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைத்து தரவேண்டும். இங்குள்ள காளியம்மன் கோவிலில் மின்னல் தாக்கியதில் மேற்கூரை சேதமடைந்து உள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.

தரம் உயர்த்த வேண்டும்

மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணை செயலாளர் முகம்மது இனாயத்துல்லா கொடுத்த மனுவில், வடகரை அரசு ஆஸ்பத்திரியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் பீர் மைதீன் கொடுத்த மனுவில், ‘தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் நோயாளிகள் வருகை அதிகரித்து வருகிறது. எனவே அதற்கேற்றார்போல் டாக்டர்களை அதிகரிக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story