தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை மனைவியை கட்டிப்போட்டு மர்மநபர்கள் கைவரிசை


தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை மனைவியை கட்டிப்போட்டு மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 8 Sept 2020 4:30 AM IST (Updated: 8 Sept 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் பட்டப்பகலில் தொழில் அதிபரின் வீடு புகுந்து, அவருடைய மனைவியை கட்டிப்போட்டு மர்மநபர்கள் 100 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

தென்காசி,

தென்காசி-நெல்லை ரோடு சம்பா தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது 61). தொழில் அதிபரான இவர் மர வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக தென்காசி வேட்டைக்காரன்குளம், கோவில்பட்டி, காஞ்சீபுரம் கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மர அறுவை ஆலைகள் உள்ளன.

இவருடைய மனைவி விஜயலட்சுமி (58). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. மகன், தந்தைக்கு உதவியாக தொழிலை கவனித்து வந்தார்.

நோட்டமிட்ட மர்மநபர்கள்

ஜெயபால் அடிக்கடி காஞ்சீபுரம் கேளம்பாக்கம், கோவில்பட்டியில் உள்ள தனது மர அறுவை ஆலைகளை பார்வையிட்டு வருவது வழக்கம். அதன்படி அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சீபுரம் கேளம்பாக்கத்தில் உள்ள மர அறுவை ஆலையை பார்வையிடுவதற்காக காரில் புறப்பட்டு சென்றார்.

பின்னர் அவர் அங்கிருந்து காரில் திரும்பி நேற்று காலையில் கோவில்பட்டிக்கு வந்து, அங்குள்ள மர அறுவை ஆலையை பார்வையிட சென்றார். தொடர்ந்து ஜெயபால் அங்கிருந்து காரில் தென்காசிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அவருடைய மகன், தொழில் விஷயமாக வெளியில் சென்று இருந்தார்.

இதற்கிடையே, ஜெயபாலின் வீட்டில் அவருடைய மனைவி விஜயலட்சுமி மட்டும் தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள், அங்கு கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.

2 மர்மநபர்கள்

அதன்படி நேற்று காலை 11.30 மணிக்கு அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் தலையில் ஹெல்மெட் அணிந்து இருந்தார். மற்றொருவர் உடல் முழுவதையும் மறைத்தவாறு பர்தா உடை அணிந்து இருந்தார்.

அவர்களில் ஹெல்மெட் அணிந்த நபர், ஜெயபாலின் வீட்டின் வெளிப்புற காம்பவுண்டு இரும்பு கதவின் தாழ்ப்பாளை திறந்து, வீட்டின் அருகில் சென்று காலிங்பெல்லை அழுத்தினார். உடனே விஜயலட்சுமி கதவை திறந்து வெளியே வந்தார்.

100 பவுன் நகை கொள்ளை

அப்போது அந்த நபர் திடீரென்று விஜயலட்சுமியின் வாயை கையால் பொத்தியவாறு, வீட்டுக்குள் தரதரவென இழுத்து சென்றார். தொடர்ந்து பர்தா அணிந்தவாறு வெளியே நின்ற நபரும் உடனே வீட்டுக்குள் புகுந்தார். அவர்கள் 2 பேரும், சத்தம் போட்டால் கத்தியாலும், ஸ்குரூ டிரைவராலும் குத்திக் கொலை செய்து விடுவதாக மிரட்டியவாறு, வீட்டில் உள்ள நகைகள், பணம் அனைத்தையும் தருமாறு விஜயலட்சுமியிடம் கேட்டனர். மேலும் அவர்கள், விஜயலட்சுமியின் கைகளை ‘செல்லோ டேப்’ மூலம் இறுக்கமாக கட்டினர். அப்போது விஜயலட்சுமி, அலமாரியில் நகைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த இடத்தை காண்பித்தார். உடனே அங்கிருந்த 100 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்த 2 மர்மநபர்களும், விஜயலட்சுமியை அங்குள்ள அறைக்குள் தள்ளி விட்டு விட்டு, வெளியே ஓடி வந்து, மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.

போலீசார் விசாரணை

உடனே விஜயலட்சுமி வெளியில் ஓடி வந்து திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார். ஆனாலும் அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் 2 மர்மநபர்களும் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். பின்னர் அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் விஜயலட்மியின் கைகளில் கட்டி இருந்த செல்லோ டேப்பை அகற்றினர். தொடர்ந்து விஜயலட்சுமி, இதுகுறித்து தனது கணவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். உடனே ஜெயபாலும் அங்கு காரில் விரைந்து வந்தார்.

இந்த துணிகர கொள்ளை குறித்து தென்காசி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

போலீஸ் மோப்ப நாய்

கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் ‘ரிக்கி’ வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு, வீட்டுக்கு மேல்புறம் உள்ள பெருமாள் கோவில் வரையிலும் ஓடிச் சென்று விட்டு, பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தது.

கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. எனவே, அந்த பகுதியில் வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு

மேலும், போலீசார் இந்த கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் தொழில் அதிபரின் வீட்டில் புகுந்து 100 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கொள்ளை நடந்த வீடானது எப்போதும் பரபரப்பாக காணப்படும் தென்காசி-நெல்லை ரோட்டின் அருகில் உள்ளது. அங்கு பட்டப்பகலில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story