பல்வேறு வழக்குகளில் போலீஸ் தேடிய வாலிபர், மன்னார்குடியில் கைது - காதலியை சந்திக்க வந்தபோது சிக்கினார்


பல்வேறு வழக்குகளில் போலீஸ் தேடிய வாலிபர், மன்னார்குடியில் கைது - காதலியை சந்திக்க வந்தபோது சிக்கினார்
x
தினத்தந்தி 8 Sept 2020 3:45 AM IST (Updated: 8 Sept 2020 5:35 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு வழக்குகளில் போலீஸ் தேடிய வாலிபர், மன்னார்குடியில் கைது செய்யப்பட்டார். திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வரும் தனது முன்னாள் காதலியை சந்திக்க வந்தபோது அவர் போலீசாரிடம் சிக்கினார்.

மன்னார்குடி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புளியம்பாறை பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் தியாகராஜன்(வயது 27). இவர் மீது நீலகிரி மாவட்டத்தில் பல வழக்குகள் உள்ளன. கடந்த 3-ந் தேதி நீலகிரியில் இருந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த தியாகராஜன், மன்னார்குடி மேல ராஜவீதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

இது குறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீசார், மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்து தியாகராஜனை பிடிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன் உத்தரவுப்படி சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், முருகானந்தம் உள்ளிட்ட போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட லாட்ஜுக்கு சென்று அங்குள்ள அறைகளில் சோதனையிட்டனர்.

இந்த சோதனையின்போது அங்குள்ள ஒரு அறையில் தியாகராஜன் தங்கி இருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் பிடித்து மன்னார்குடி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அந்த பெண் தற்போது திருமணமாகி மன்னார்குடியில் கணவருடன் வசித்து வருவதாகவும் அந்த பெண்ணை சந்திக்க தியாகராஜன் நீலகிரியில் இருந்த மன்னார்குடிக்கு வந்ததும் தெரிய வந்தது.

இது குறித்து மன்னார்குடி போலீசார் கூடலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மன்னார்குடிக்கு வந்த கூடலூர் போலீசார், தியாகராஜனை கைது செய்து விசாரணைக்காக நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு அழைத்து சென்றனர்.

Next Story