விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல் - திருவாரூரில் பரபரப்பு


விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல் - திருவாரூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Sept 2020 3:45 AM IST (Updated: 8 Sept 2020 6:06 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில், விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு தொடர்பாக கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பா.ஜனதா கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்,

பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜனதா மாநில விவசாய அணி செயலாளர் கோவி.சந்துரு தலைமையில் கட்சியின் மாவட்ட தலைவர் ராகவன், விவசாய அணி தலைவர் கார்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், ரவிச்சந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் துரையரசன், செல்வம், பாஸ்கர் ஆகியோர் நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்திடம் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.

அப்போது பா.ஜனதா நிர்வாகிகள் அனைவரையும் மனு அளிக்க உள்ளே அனுமதிக்க போலீசார் மறுத்ததாக தெரிகிறது. இதை கண்டித்து கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சாலைமறியல் காரணமாக திருவாரூர்-தஞ்சை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன், துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 3 பேர் மட்டும் மனு அளிக்க ஏற்பாடு செய்தனர்.

இதைத்தொடர்ந்து கட்சியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பி்ரதம மந்திரி விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 9 கோடியே 50 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர். 3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் என்று ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

விவசாயிக்கான நிதி உதவி அவருடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவது இந்த திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 40 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர். நலிவுற்ற விவசாயிகள் எந்தவித இடர்பாடும் இன்றி விவசாயம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இணையதளத்தில் பதிவு செய்ய அரசு மேற்கொண்டுள்ள வழிகளை விவசாயிகள் அல்லாதவர்கள் தவறாக கையாண்டு உதவித்தொகை பெற்று அரசாங்கத்தை ஏமாற்றி இருப்பது குற்றமாகும்.

எனவே இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பயன்பெற்றோர் பற்றிய கணக்கெடுப்பை எடுத்து மோசடி நடந்துள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். உண்மையான விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைக்கவும், விவசாயிகள் அல்லாமல் மோசடி செய்து இருப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story