திண்டிவனம் அருகே, பெண் கற்பழித்து படுகொலை - மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
திண்டிவனம் அருகே பெண்ணை கற்பழித்து படுகொலை செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள விழுக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர், சென்னையில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவரது முதல் மனைவி கன்னியம்மாள்(வயது 55), 2-வது மனைவி மல்லிகா(50). மல்லிகா சென்னை கூடுவாஞ்சேரியில் வசித்து வருகிறார். கன்னியம்மாள் விழுக்கத்தில் தனி வீட்டில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார்.
சமீபத்தில் முருகன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வாரத்தில் ஒரு முறை மட்டும் சென்னைக்கு சென்று முருகனை, கன்னியம்மாள் பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் கன்னியம்மாள் கழுத்து அறுக்கப்பட்டு, நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதை அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், ரோஷனை இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும் தடயவியல் நிபுணர் சண்முகம், கை ரேகை நிபுணர்கள் ராஜவேல், அசாருதீன் ஆகியோரும் நேரில் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த வழக்கில் துப்பு துலக்குவதற்காக விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் சாய்னாவும் வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த வீட்டில் மோப்பமிட்ட அது, அங்கிருந்து மெயின்ரோடு வரை ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
கன்னியம்மாள் இறந்து கிடந்த நிலையை பார்க்கையில், அவரை மர்மநபர் கற்பழித்து கழுத்தை அறுத்து படுகொலை செய்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அது தொடர்பான சில ஆதாரங்களும் போலீசாரிடம் கிடைத்துள்ளது. கொலை நடந்த வீட்டில் நகையோ, பணமோ திருடுபோக வில்லை. ஆனால் அவரது செல்போனை மட்டும் காணவில்லை. அதனை மர்மநபர் எடுத்துச்சென்றிருக்கிறார். இதையடுத்து கன்னியம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கொலை சம்பவம் குறித்து ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கன்னியம்மாளுக்கு நன்கு தெரிந்த நபரே வீட்டிற்குள் நுழைந்து, அவரை கற்பழித்து, கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார். கன்னியம்மாளின் செல்போன் நம்பரை வைத்து, அவரிடம் யார்-யார்? அடிக்கடி பேசி வந்தனர் என்பது குறித்தும், அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றவர்கள் யார்-யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் குற்றவாளியை பிடித்து விடுவோம் என்றனர்.
கொலை செய்யப்பட்ட கன்னியம்மாளுக்கு பாலசுப்பிரமணியன்(38), மணிகண்டன்(28) ஆகிய 2 மகன்களும், பொம்மி(35) என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story