திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு - மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு வந்தவர்கள்


திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு - மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு வந்தவர்கள்
x
தினத்தந்தி 8 Sept 2020 4:00 AM IST (Updated: 8 Sept 2020 9:42 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனுகொடுக்க வந்த இரு குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தொலைபேசி வழி மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தொலைபேசி மூலமாகவும், வாட்ஸ்-அப் மூலமாகவும் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதுமட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து அங்கு வைக்கப்பட்டு இருந்து மனு பெட்டியில் மனுக்களை செலுத்தினர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சாத்தனூர் அணை மல்லிகாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 61). நேற்று செல்வராஜ், அவரது மனைவி பராசக்தி, மகன் பார்த்திபன் (35) மற்றும் மருமகள், பேர குழந்தைகள் என 8 பேர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் திடீரென தங்கள் மீது மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றினர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் செல்வராஜ் கூறுகையில், தனக்கு மல்லிகாபுரத்தில் சொந்தமாக வீடு உள்ளது. அங்கு தனது தாயாரும், தங்கை குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களாக எங்களுக்கு வாழ்வாதாரம் இல்லாததால் நாங்கள் அந்த வீட்டில் வசிக்க சென்றோம். தங்கை குடும்பத்தினர் எங்களிடம் தகராறு செய்கின்றனர். எனது சொத்தை மீட்டு தர வேண்டும் என்றார். பின்னர் அவர்களை போலீசார் சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர்.

அதேபோல் திருவண்ணாமலை நாயுடுமங்கலம் அருகில் உள்ள முனியன்தாங்கல் பகுதியை சேர்ந்த உத்திரியமேரி (75) என்பவர் தனது மகள் ஜோஸ்பின்ராணி மற்றும் உறவினர்கள் தாள், காணிக்கைராஜ் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் திடீரென தங்கள் மீது மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், கிராமத்தில் எங்களுக்கு சொந்தமாக நிலம் உள்ளது. அங்கு வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் எடுத்து கருங்கற்கள் புதைப்பதற்கு பள்ளம் எடுத்திருந்தோம். எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் பொக்லைன் எந்திரம் கொண்டு பள்ளத்தை மூடி விட்டு எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். மேலும் அவர் எங்களது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின்னர் அவர்களை போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவங்களால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் சுமார் 250 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 15 வருடங்களுக்காக மாதம் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை சம்பளம் பெற்று வருகிறோம். எங்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கூறி திடீரென கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களிடம் திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து செய்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு சென்றனர்.

Next Story